


ஈப்போ, மே.14: பேராக் மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 113 சிறந்த மாணவர்களை அப்பள்ளிகளின் வாயிலாக அடையாளம் காணப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும், அமால் மக்மூர் சமூகநல இயக்க செயலாளருமாகிய க.நாச்சிமுத்து கூறினார்.
இம்மாணவர்களில் தனிப்பட்ட குழுவின் வாயிலாக 10 சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் எண்மருக்கு டத்தோ ஸ்ரீ என்.எஸ்.செல்வமணி விருது வழங்கப்பட்டது. மேலும் இருவருக்கு துன் வீ.தி. சம்பந்தன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் உற்சாகத்துடன் செயல்பட இத்தகைய விருதுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இவர்கள் இடைநிலைப்பள்ளியில் மேலும் அதிகமான கவனம் செலுத்தி வெற்றிப்பெற வேண்டும் என்பதுதான் உன்னத நோக்கமாகும். ஆகையால், வரும் ஐந்தாண்டுக்குள் எஸ்.பி.எம் தேர்வில் இம்மாணவர்கள் சிறப்பான தேர்ச்சியை அடைய இதுவே சிறந்த வழியாகும் என்று அவர் தெரிவி்த்தார்.
இந்நிகழ்வு வெற்றியடைய உதவிகள் வழங்கிய பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள் மன்றம், மாநில மற்றும் மாவட்ட கல்வி இலாகாவிற்கும் பெற்றோர்களுக்கும் தம் நன்றியை நாச்சிமுத்து தெரிவித்துக்கொண்டார்.