
கடன் வசூல் நிறுவனங்கள் யாரையும் மிரட்டுவது இல்லை. சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன என்று மலேசிய தொழில்முறை கடன் வசூல் நிறுவனங்களின் சங்கத்தின் துணைத் தலைவர் அன்பானந்தன் கூறினார்.
நாட்டில் உள்ள கடன் வசூல் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதுவரை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இச்சங்கத்தில் தற்போது இணைந்துள்ளன.
இந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் வாயிலாக இத் தொழில் துறையில் உள்ள பிரச்சினைகளை நேரடியாக கையாள்வது முக்கிய இலக்காக உள்ளது.
அதேவேளையில் இந்த தொழில் துறையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்பதும் எங்களின் நோக்கமாகும்.
குறிப்பாக கடன் வசூல் செய்யும் நிறுவனங்கள் மக்களை மிரட்டி தான் பணம் வாங்குகிறது என்ற தவறான பார்வை உள்ளது. ஆனால் உண்மையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன.
யாரையும் மிரட்டியோ அச்சுறுத்தியோ பணம் வசூலிப்பது எங்கள் வேலை அல்ல.
இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்பானந்தன் கூறினார்.

