படகு விபத்தில் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

பட்டர்வொர்த், ஜூலை 1 – கடந்த சனிக்கிழமை இரவு பெசுட், பெர்ஹெந்தியான் தீவில் நிகழ்ந்த படகு விபத்தில் பலியான 40 வயதுடைய எஸ்.ஆறுமுகம் மற்றும் அவரின் மூன்று வயது மகளான ஏ.சர்விக்கா ஆகியோருக்கு நேற்று பட்டர்வொர்த், தாமான் பாயு அமான் எனும் முகவரியில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

கணவன் பிள்ளை என ஒரே குடும்பத்தில் இரு உயிர்களை இழந்து தவிக்கும் 39 வயதுடைய ஏ.சங்கீதாவிற்கு வந்திருந்தவர்கள் கனத்து இதயத்துடன் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தனர்.

பிற்பகல் மணி 2.30க்கு மேல் பட்டர்வொர்த், ஜாலான் சீராமில் உள்ள மின்சுடலையில் அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

பினாங்கு பட்டர்வொர்த்தைச் சேர்ந்த ஆறுமுகம் சங்கீதா குடும்பத்தினர், திரங்கானுவில் உள்ள தீவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றிருந்தபோது எதிர்பாரா இத்துயரம் நேர்ந்தது.

அன்றைய தினம் இரவு மணி 10.30 அளவில் நிகழ்ந்த இச்சம்வத்தில் ஆறுமுகத்தின் உறவுக்காரப் பிள்ளையான பத்து வயதுடைய வி.வெண்பணி என்ற தமிழ்ப்பள்ளி மாணவியும் உயிரிழந்தார்.

தமது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் கணவரின் நண்பர்களுடன், Pulau Perhentian Kecil தீவில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதாகக் கூறிய சங்கீதா, வானிலை மழை தூறுவது போன்று இருப்பதை அறிந்ததும் இரவு மணி 9 அளவில் Pulau Perhentian Besar-இல் உள்ள தங்களின் தங்கும் விடுதிக்கு திரும்புவதற்காக குறிப்பிட்ட படகில் ஏறியதாகத் தெரிவித்தார்.

பிள்ளைகள் உட்பட அனைவரின் பாதுகாப்பைக் கருதி பலமுறை பாதுகாப்பு ஜேக்கெட் கேட்டிருந்தும் அது ஈரமாக இருப்பதாகவும் மேலும் தாங்கள் தங்கியிருக்கும் விடுதியை நெருங்கி விட்டதாகவும் கூறி, படகின் ஓட்டுநர் தட்டிக் கழித்து விட்டதாக சங்கீதா விவரித்தார்.

“அந்த ஓட்டுநர் நினைத்திருந்தால் படகைத் திருப்பி இருக்கலாம். ஏனெனில், நாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் தான் அலை மிகவும் வேகமாக உயரத் தொடங்கி இருந்தது. அவர் வேறு பாதைக்கு படகை திருப்பி விட்டிருக்கலாம்.

ஆனால், நாங்கள் கேட்டுக் கொண்டபோது இன்னும் ஒன்றிரண்டு நிமிடங்களில் கரையை அடைந்துவிடுவோம் என்று அவர் கூறினார். நாங்களும் அந்த இடத்திலிருந்து பார்க்கையில் எங்களின் தங்கும் விடுதியை பார்க்க முடிந்தது,” என்று அவர் விவரித்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே கனத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததுடன் அப்பகுதியே முற்றிலும் இருண்டு போய் படகு நிலைத்தடுமாறத் தொடங்கியது.

அப்போது மூத்த மகளை தாமும் இளைய மகளை கணவரும் இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் பெரிய அலை வந்து படகை முழுமையாகக் கவிழ்த்தாக சங்கீதா தெரிவித்தார்.

அருகிலிருந்த ஒருவரின் துணையோடு ஒன்பது வயது மகளுடன் சங்கீதா கரையேற்றப்பட்ட நிலையில் கணவரும் இரண்டாவது மகளும் படகின் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கணவரின் 40-வது வயது பிறந்தநாளுக்காக, தங்கள் குடும்பத்துடன் முதன் முறையாக மேற்கொண்ட சுற்றுலாப் பயணம் இதுவென்றும் சங்கீதா வேதனையுடன் கூறினார்.

இதனிடையே, நீண்டகாலத்திற்குப் பிறகே பிறந்த பேத்தி இப்படி கண்ணிமைக்குள் நேரத்தில் தங்களை விட்டு பிரிவார் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை என்று இச்சம்பவத்தில் பலியான வெண்பனியின் 68 வயதுடைய பாட்டி பஞ்சவர்ணம் என்பவரும் தெரிவித்தார்.

பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles