உயர்கல்விக்கூட மாணவி கொலை – மூன்று சந்தேக நபர்களின் தடுப்புக் காவல் ஏழு நாட்களுக்கு நீட்டிப்பு

சிப்பாங், ஜூலை 3 – சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவர் கடந்த 24ஆம் தேதி கொலை செய்யப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகள் மேலும் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு ஆடவர் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய சந்தேக நபர்கள் இன்று காலை 8.40 மணிக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
அவர்களை நாளை முதல் அடுத்த வியாழக்கிழமை வரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் கைரத்துல் அனிமா ஜெலானி அனுமதி வழங்கினார்.

முன்னதாக, அவர்கள் அனைவரும் ஜூன் 27 முதல் இன்று வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். கொலை குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

முக்கிய சந்தேக நபரான பாதிக்கப்பட்டவரின் வீட்டுத் தோழியின் காதலன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் 48 மணி நேரத்திற்குள் இந்த கொலை வழக்கிற்கு தீர்வு காணப்பட்டதாக சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஒமார் கான் முன்னதாகக் கூறியிருந்தார்.

பிஸியோதெராபி துறையில் இளங்கலை படிப்பை மேற்கொண்டு வந்த சரவாக்கைச் சேர்ந்த அந்த மாணவி கடந்த ஜூன் 24ஆம் தேதி காலை 10.00 மணியளவில் சைபர்ஜெயாவில் உள்ள அவரது ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles