
கோலாலம்பூர், ஜூலை 25 – அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டில்
கடைபிடிக்கப்பட்டு வரும் ஜனநாயக மதிப்புக் கூறுகளுக்கு ஏற்ப
அமைதியான முறையில் ஒன்று கூடி தங்கள் கருத்தை வெளியிட
மக்களுக்கு உள்ள உரிமையை அரச மலேசிய போலீஸ் படை மதிக்கிறது.
எதிர்வரும் சனிக்கிழமை இங்குள்ள டத்தாரான் மெர்டோக்காவில் ஏற்பாடு
செய்யபட்டிருக்கும் அமைதிப் பேரணி சீராகவும் பாதுகாப்பாகவும்
கட்டொழுங்குடனும் நடைபெறுவதை உறுதி செய்வதில் ஒரு
வழிநடத்துநராக செயல்படும் கடப்பாட்டை அரச மலேசிய போலீஸ் படை
கொண்டுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது
காலிட் இஸ்மாயில் கூறினார்.
இந்த உணர்வின் அடிப்படையில் அந்த பேரணி அமைதியுடனும்
பாதுகாப்பாகவும் சீராகவும் பொது மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும்
நடைபெறுவதை உறுதி செய்வதில் ஒரு வழி நடத்துநராக அரச மலேசிய
போலீஸ் படை செயல்படும் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
பேரணியின் போது நல்லிணக்க உணர்வு தொடர்ந்து
நிலைநாட்டப்படுவதற்கு ஏதுவாக அனைத்து தரப்பினருக்கும் இடையே
ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று அவர் சொன்னார்.
பேரணியில் பங்கேற்போர் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க
வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்ட பகுதியில் பொது ஒழுங்கு மற்றும
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பேரணியில் கலந்து கொள்ளாதவர்கள் தங்கள் பயணங்களை
முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதோடு அதிகரிப்புக் காணும் என
எதிர்பார்க்கப்படும் வாகன எண்ணிக்கை காரணமாக நெரிசலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க முன்கூட்டியே போக்குவரத்து தொடர்பான தகவல்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.