நாடாளுமன்றத்திற்கு வெளியே மறியலின் போது கைகலப்பு – போலீஸ் விசாரணை!

கோலாலம்பூர், ஆக  14 – இங்குள்ள ஜாலான் பார்லிமென்டில் நேற்று நடந்த மறியலின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை சித்தரிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறையினர் அது குறித்த  விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஆட்சேப மனுவை சமர்ப்பிக்கும் போது சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கு சினமூட்டக்கூடிய  மற்றும்  அவர்களைத் தாக்கும் சம்பவங்களை அந்த டிக்டோக் காட்சிகள் சித்தரிப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.

இந்த மோதலின் விளைவாக ஓர் அதிகாரி காயமடைந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஒரு அரசு ஊழியரை கடமைகளைச் செய்வதைத் தடுக்க குற்றவியல் பலாத்காரத்தை பயன்படுத்தியதற்காகவும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் கீழறுப்பு செய்ததற்காகவும் தண்டனைச் சட்டத்தின்  353 மற்றும் 427 பிரிவுகளின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அமைதியாக ஒன்றுகூட அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளஉரிமையை காவல்துறை நிலைநிறுத்தும் என்று ஃபாடில் மீண்டும் வலியுறுத்தினார்.

அதே சமயம்,  அமைதியின்மையைத் தூண்டும் அல்லது அதிகப்படியான சினமூட்டும் செயலில் ஈடுபடும்  தரப்பினருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles