ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மலேசியாவின் தனித்துவம்!!

பல்லினம் வாழும் மலேசியா உலக நாடுகளுக்கு ஒற்றுமைக்கும் புரிந்துணர்விற்கும் ஒரு முன்மாதிரி என தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் ஷாஸ்ரி ஹிட்ஷாம் நினைவுறுத்தினார்.

நம் நாட்டின் தனித்துவமே மலேசியர்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தான் என்றும் குறிப்பிட்ட அவர் நாம் அனைவரும் மலேசியர்கள் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என பெருமிதம் கொண்டார்.

தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற உறுப்பினர் கவுன்சிலர் சிவகுமார் (சிவாலெனின்)
ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம் மற்றும் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இதனை நினைவுறுத்தினார்.

மேலும்,சிறுவர்களிடையே நாட்டு பற்றையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கவும் பேணிடவும் இதுபோன்ற கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் அவசியமாவதாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சி தொடர்பில் பேசிய கவுன்சிலர் சிவாலெனின் ” Euttac Cambridge Centre” ஆதரவோடு அதன் ஒருங்கிணைப்பாளர் திருமதி.உமாவின் ஒத்துழைப்போடு இந்நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறுவதாக கூறினார்.

சுதந்திர நாளை கொண்டாடுவது மட்டும் இந்நிகழ்ச்சியின் நோக்கம் அல்ல.மாறாய், சிறுவர்களிடம் தேச உணர்வை பதியச் செய்வதோடு இந்நாட்டின் நனிச் சிறந்த அடையாளங்களையும் வாழ்வியல் சூழல்களையும்,பண்பாடு பாரம்பரியங்களையும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் நகர்த்தும் மாபெரும் முயற்சி என்றார்.

தேசிய கொடியை ஏந்தி செல்லும் போதும் அதனை மற்றவர்களுக்கு பகிரும் போதும் ஏற்படும் உணர்வானது ஒவ்வொரு மலேசியருக்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியை கொடுக்க கூடியது என கூறிய சிவாலெனின் மலேசியரான நாம் அனைவரும் நம் நாட்டை போற்றி மதிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

பொது மக்களுக்கும் சிறுவர்களும் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாய் சென்றதோடு சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு தேசிய கொடியும் வழங்கி சுதந்திர நாள் உணர்வும் மலேசியர் என்னும் உயரிய மாண்பும் விதைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles