மஞ்சோங் வட்டாரப் பேரவை முன்னெடுப்பில் திருமுறை மரபுக்கு புத்துயிர்; மாணவர்கள் பெரும் பங்கேற்பு!

மஞ்சோங், ஜூலை 28-

சைவ சமயப் பாரம்பரியத்தையும் தமிழர் ஆன்மிக அடையாளத்தையும் இளைய தலைமுறையினரிடம் வலுப்படுத்தும் நோக்கில் மலேசிய இந்து சங்கம் மஞ்சோங் வட்டாரப் பேரவை நடத்திய 48ஆவது திருமுறை ஓதும் விழாவில், 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்று தங்களது தனித் திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம், திருமுறைகள் அறநெறி, ஒழுக்கம் மற்றும் ஆன்மிக வாழ்வை வழிநடத்தும் அரிய பொக்கிஷங்கள் என்றும், அவற்றை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இத்தகைய விழாக்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் கூறினார்.

மேலும், திருமுறைப் பணிகள் தொடர்ந்து வளர வேண்டும் என்பதற்காக தனது சிறப்பு மானிய நிதியிலிருந்து 5,000 ரிங்கிட் நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். அஸ்தாக்கா சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் இங் தியேனும் 2,000 ரிங்கிட் நன்கொடையாக வழங்கினார்.

மலேசிய இந்து சங்கம் மஞ்சோங் வட்டாரப் பேரவையின் தலைவர் இந்திராணி தர்மன், திருமுறை என்பது சமய இலக்கியம் மட்டுமல்ல; தலைமுறைகளை நல்வழிப்படுத்தும் ஆன்மிகச் செல்வம் என்றும், மாணவர்களிடம் சமய, பண்பாட்டு விழுமியங்களை விதைக்கும் சிறந்த தளமாக இவ்விழா அமைகிறது என்றும் தெரிவித்தார்.

பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டத்தோ ஙே கூ ஹாம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மாபெரும் இவ்விழாவில் மஞ்சோங் மாவட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகத் தலைவர்கள், ஆலயப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles