



அகல்யா
புக்கிட் மெர்த்தாஜம், ஜூலை 28 –
பினாங்கு, புக்கிட் மெர்த்தாஜம் புனித சந்தன மாதா பேராலயத்தின் 180-ஆவது ஆண்டுத் திருவிழா ஜூலை 17 முதல் ஜூலை 26 வரை 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று
கோலாகலமாக நிறைவுற்றது.
சாதி, மத, இன வேறுபாடுகளின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலையெனத் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் சாத்தியும், நேர்த்திக்கடன்களைச் செலுத்தியும் வழிப்பட்டனர். சந்தன மாதாவின் சொரூபம் தாங்கிய மின்விளக்குத் தேர்ப் பவனி நகரின் வீதிகளில் பவனி வந்த வேளையில் பல்லின மக்களும் ஒன்றிணைந்து ஆன்மீகத்தில் திளைத்தனர்.
ஆலயத்தின் வரலாற்றுச் மைல்கற்கள்
1833: பிரெஞ்சு அடிகளார் குளோட் ஆந்த்ரே பாத்தோன் என்பவரால் இங்கு மறைப்பணி தொடங்கப்பட்டது.
1846: அடிகளார் அடோல்ஃப் கூலான் என்பவரால் முதல் சிறிய மரச் சிற்றாலயம் அமைக்கப்பட்டது.
1888: அடிகளார் அடோல்ஃப் கூபெல் முயற்சியால் கற்களாலான புதிய ஆலயம் கட்டப்பட்டது.
2002: ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வழிபடக்கூடிய பிரமாண்ட பேராலயம் திறக்கப்பட்டது.
2019: வத்திக்கான் தலைமைப் பீடத்தால் மலேசியாவின் முதல் ‘மைனர் பசிலிக்கா’ (Minor Basilica) அந்தஸ்து வழங்கப்பட்டது.
மே 2026: பினாங்கு அரசு இத்திருவிழாவை மாநிலத்தின் “அருவக் கலாச்சாரப் பாரம்பரியச் சொத்தாக” (Intangible Cultural Heritage) அங்கீகரித்தது.
180-ஆவது ஆண்டுத் திருவிழாச் சிறப்புகள்
1846-ஆம் ஆண்டு சிற்றாலயம் அமைக்கப்பட்டதில் இருந்து கணக்கிடப்பட்டு, நடப்பாண்டு (2026) “தூய சந்தன மாதாவுடன் இணைந்து பயணித்தல்.எனும் மையப்பொருளில் விழா அனுசரிக்கப்பட்டது.
தினசரி திருப்பலிகளில் நம்பிக்கை வளர்த்தல், வேற்றுமையில் ஒற்றுமை, இளைஞர் அதிகாரம், இயற்கை பாதுகாப்பு மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் ஆகிய நற்சிந்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. தாய்மை மற்றும் குடும்பங்களின் பாதுகாவலியாகத் திகழும் சந்தன மாதாவின் அருள்வேண்டி திரளான மக்கள் கூடி பிரார்த்தனை செய்ய, இவ்வாண்டு திருவிழா இனிதே நிறைவடைந்தது.

