

சுங்கை சிப்புட், செப்.16: அலாம் மெடிக் கிளினிக் நிறுவனம் தமது மூன்றாவது கிளினிக்கை இங்குள்ள காராய் வழியில் எங்கோரில் திறப்பு விழா கண்டது. ஏற்கனவே, சுங்கை சிப்புட் மற்றும் தஞ்சோங் ரம்புத்தானில் அதன் இரு கிளினிக்களும் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முன்னாள் ஏஎஸ்பி சுப்பிரமணியம் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த காராய் வட்டாரத்தில் எந்தவொரு தனியார் கிளினிக்கும் செயல்படவில்லை. அதே வேளையில் தற்போதய அரசாங்க கிளினிக்கில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, இங்குள்ள மக்கள் சிகிச்சை பெற சுங்கை சிப்புட் அல்லது கோலகங்சார் செல்ல வேண்டிய நிலைப்பாடு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இங்கு ஒரு தனியார் கிளினிக் அவசியம் என்று கருதி இங்கே கிளினிக்கை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள அரசாங்க கிளினிக்கிற்கு குறைந்தபட்சம் அனுதினமும் 200 முதல் 300 நோயாளிகள் வருகின்றனர் என்று கடந்த ஐந்து வருடங்களாக இங்கே பணியாற்றிய தமது மகள் டாக்டர் துர்கா சுப்பிரமணியம் தம்மிடம் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இங்குள்ள புறநகர் மக்களுக்கு உதவும் பொருட்டு ரத்த சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வெறும் 39 ரிங்கிட் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். தற்போது இந்த கிளினிக் காலை 9.00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணி வரை செயல்படுகிறது. இங்குள்ள மக்களின் ஆதரவு மற்றும் தேவை அதிகரித்தால் 23 மணி சேவை கிளினிக் திட்டத்தை உருவாக்க முடியும் என்று உறுதியளித்தார் டாக்டர் துர்கா சுப்பிரமணியம்.
இதனைத் தவிர்த்து மேலும் அதிகமான மருத்துவ சேவைகள், வீட்டிற்கு சென்று சேவையாற்றுதல், அம்புலன்ஸ் வசதிகள் மற்றும் மருத்துவ சலுகைகள் வழங்கும் சேவைகளும் இங்கே வழங்கப்படும். இங்குள்ள மக்களுக்கு குறைந்த விலையில் நிறைவான சேவை வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த மூன்றாவது கிளினிக் கிளை நிறுவனத்தை இங்குள்ள கோத்தா லாமான் கானான் பெங்குளு துவான் அப்துல் ரஹ்மான் முகமட் தாகீர் தம்பதியர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

