கோலா கிள்ளானில் 2025ஆம் ஆண்டுக்கான ‘தமிழ் விழா’

கிள்ளான், செப் 15 – கடந்த சனிக்கிழமை கோலா கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் 2025ஆம் ஆண்டு ‘தமிழ் விழா’ சிறப்பாக நடந்தது.

மொழி, கலை, கலாச்சாரம் ஆகிய பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்திய தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கல்வி மாணவர்களுக்கான பட்டிமன்ற போட்டி மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதாக அதன் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், கோலா கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் ஒவ்வோர் ஆண்டும் இந்த தமிழ் விழாவை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில அளவில் 42 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கட்டுரை எழுதுதல், வர்ணம் தீட்டுதல், மூன்று மொழிகளில் பேச்சுப் பேட்டி, கவிதை ஒப்புவித்தல் உட்பட 11 போட்டிகள் நடத்தப்பட்டன.

அதே போன்று, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் நடைபெற்ற போட்டிகளில் புதிர்போட்டி முக்கிய அங்கம் வகித்தது.

இப்போட்டிகள் அனைத்தும் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை கட்டம் கட்டமாக நடைபெற்றதாக 36-வது தமிழ் விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பிரசாத் கிருஷ்ணன் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு விழாவில் முதல் முறையாக உயர்கல்வி மாணவர்களுக்காக பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருக்கிறோம். முன்னதாக, இது இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குதான் நடத்தப்பட்டது. இதை ஒரு புதிய முயற்சியாக மேற்கொண்டோம் என்றார்.

மேலும், இந்த விழாவில் பரதநாட்டிய போட்டியும் அதற்காக வழங்கப்படும் சுழற்கிண்ணமும் முக்கிய அங்கம் வகிப்பதாக கோலா கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் துணைத் தலைவருமான பிரசாத் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles