வெளிநாட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறை:முன்னாள் அமைச்சர்களின் விமர்சனங்களுக்கு ரமணனின் அரசியல் செயலாளர் கடும் கண்டனம்

கோலாலம்பூர், ஏப்.22-
வெளிநாட்டுத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பு (FWCMS) மற்றும் முன்மொழியப்பட்டுள்ள ‘துராப்’ (Turap) ஆட்சேர்ப்புத் தளம் குறித்து முன்னாள் அமைச்சர்கள் இருவர் முன்வைத்துள்ள விமர்சனங்களுக்கு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் ஐசுதீன் அப்துல் காஃபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2031-ஆம் ஆண்டு வரை FWCMS ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான முடிவு 2024 ஜூன் 24 அன்று எடுக்கப்பட்டபோது, தற்போது விமர்சனங்களை முன்வைக்கும் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் அமைச்சரவையில் முறையே பொருளாதார அமைச்சராகவும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரம், தகவல் அறியும் வாய்ப்பு மற்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த அமைச்சர்கள், முடிவெடுக்கும் மேசையில் இருந்தபோது ஏன் இந்த பலவீனங்களைச் சுட்டிக்காட்டவில்லை என்று ஐசுதீன் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்போது குற்றம் சாட்டப்படும் குறைபாடுகள் உண்மையிலேயே தீவிரமானவை என்றால், அவை ஏன் அப்போதே பேசப்படவில்லை என்றும், தற்போது பதவி விலகிய பிறகு குரல் கொடுப்பது ஏன் என்றும் அவர் வினவினார். இது வெறும் கருத்து வேறுபாடு மட்டுமல்ல, அரசியலில் நேர்மை மற்றும் நிலைத்தன்மை குறித்த கேள்வி என்று அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

FWCMS அமைப்புடன் தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (NIISe) ஒன்றுடன் ஒன்று மோதும் அபாயம் இருப்பதாக பொதுக் கணக்குக் குழு (PAC) ஏற்கனவே எச்சரித்திருந்தும், அமைச்சரவையில் இருந்தபோது இவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

அதிகாரத்தில் இருந்தபோது மௌனம் காத்துவிட்டு, பொறுப்பிலிருந்து விலகிய பிறகு வெளிப்படையாகப் பேசுவது அரசியல் நயவஞ்சகத்தையே காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார்.

அமைச்சரவையில் இருந்தபோது அவர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு, இப்போது எப்படி அவர்களது விமர்சனத்திற்கு உள்ளாகிறது என்பது குழப்பமளிப்பதாகவும், இது இதுவரை கண்டிராத ஒரு புதிய வகை அரசியல் தந்திரம் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை மலேசியர்கள் மதிக்கிறார்கள் என்றாலும், அந்தச் சரிபார்ப்புகள் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகத் திரித்துச் சொல்லப்படும் கதைகளாக இருக்கக்கூடாது என்று ஐசுதீன் வலியுறுத்தினார்.

பாண்டான் மற்றும் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர்களான அவர்கள் இருவரும், அரசாங்கத்தின் முடிவுகளுக்குக் கட்டுப்படும் ‘கூட்டுப் பொறுப்பு’ எனும் தார்மீகக் கொள்கையை மதிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், முன்மொழியப்பட்டுள்ள ‘துராப்’ அமைப்பு அவசியமற்றது என்றும், NIISe அமைப்பையே பயன்படுத்த வேண்டும் என்றும் நேற்று முந்தினம் 10 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்திருந்த அறிக்கையையும் ஐசுதீன் விமர்சித்தார்.

அந்த அறிக்கை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், வெளிநாட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறை, FWCMS மற்றும் NIISe ஆகியவற்றுக்கு இடையேயான வெவ்வேறு செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளத் தவறியதையே இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ‘துராப்’ எனும் புதிய வெளிநாட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறை இன்னும் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்றும், இது தொடர்பாக எந்த இறுதி முடிவோ, நியமனமோ அல்லது யாருக்கும் வாக்குறுதியோ வழங்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles