
ஷா ஆலம், ஏப்ரல் 21: 2026 சிலாங்கூர் மலேசிய விளையாட்டுப் போட்டிகளை (சுக்மா) ஒத்திவைக்கும் பரிந்துரையை, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் (ADN) கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலிக்கும்.
இந்த விவகாரம் விரிவான கருத்துக்களைப் பெறுவதற்காக சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் (DNS) விவாதிக்கப்படும் என்று விளையாட்டுத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.
“சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். அதன் பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கு முன், பெறப்பட்ட கருத்துக்களை மாநில அரசு ஆராயும்,” என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் 15வது சட்டமன்றத்தின் நான்காவது தவணை தொடக்க விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போட்டிகளை ஒத்திவைக்கப் பரிந்துரைத்த சிலாங்கூர் சுல்தானின் அறிவுரையும் மாநில அரசின் பரிசீலனையில் வழிகாட்டியாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
“மாட்சிமை தங்கிய சுல்தானின் அறிவுரையை நாம் ஒரு வழிகாட்டியாகவும், அடுத்தடுத்த முடிவுகளை எடுப்பதற்கான வழிகாட்டுதலாகவும் கொள்ள வேண்டும்,” என்றார்.
செலவு மற்றும் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இந்த கருத்தை வெளிப்படுத்தியதாகவும், எனவே இதற்கு முழுமையான ஆய்வு தேவை என்றும் முகமட் நஜ்வான் விளக்கினார்.

