
மாரான், ஜூலை 27 – இந்திய மாணவர்களின் கல்வி வெற்றியும் எதிர்கால முன்னேற்றமும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும்; எனவே, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சபாய் சட்டமன்ற உறுப்பினரும் பகாங் மாநில ம.இ.கா. தலைவருமான வீ.ஆறுமுகம் வலியுறுத்தினார்.
பகாங், மாரான் அருள்மிகு ஸ்ரீ மரத்தாண்டவர் திருக்கோவிலில், ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் 32-வது மாபெரும் கல்வி யாத்திரையை முன்னிட்டு நேற்று மாலை நடைபெற்ற பகாங் மாநில ‘ஒற்றுமை வேல் பூஜை’யில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் தேர்வுகளில் சிறந்த வெற்றியை நோக்கமாகக் கொண்டு, மலேசியா முழுவதும் உள்ள ஆறு முக்கிய முருகன் திருத்தலங்களில் ஒரே நேரத்தில் இந்த ஒற்றுமை வேல் பூஜை நடைபெற்றது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், இத்தகைய ஆன்மிக முயற்சிகள் மாணவர்களுக்கு மனவலிமையையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்றார்.

மேலும், ஸ்ரீமுருகன் கல்வி நிலையம் கடந்த 44 ஆண்டுகளாக இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதன் வழிகாட்டுதலால் கல்வியில் சிறந்து விளங்கி, உயர்கல்வி மற்றும் தொழில் துறைகளில் முன்னேறியிருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.
இந்த 32-வது மாபெரும் கல்வி யாத்திரையை முன்னிட்டு, ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் தலைவர் சுரேன் கந்தா தலைமையிலான குழுவினர், தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலுக்குச் சென்று சிறப்பு வேல் பூஜை நடத்தினர்.
தொடர்ந்து மலேசியா திரும்பி, நாடு முழுவதிலும் உள்ள ஆறு முக்கிய முருகன் திருத்தலங்களில் ஒற்றுமை வேல் பூஜையை முன்னெடுத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது என்று ஆறுமுகம் குறிப்பிட்டார்.
அந்த ஆறு திருத்தலங்களில் ஒன்றாகப் பகாங் மாநிலத்தின் மாரான் அருள்மிகு ஸ்ரீ மரத்தாண்டவர் திருக்கோவில் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பக்தியோடு வேல் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரை, பத்துமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் 32-வது மாபெரும் கல்வி யாத்திரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சுமார் 10,000 மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வு, இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஞானம், ஒழுக்கம் மற்றும் எதிர்கால வெற்றிக்காக இறையருள் வேண்டி நடத்தப்படும் ஒரு மாபெரும் சமூக மற்றும் ஆன்மிக நிகழ்வாகும். எனவே, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதில் திரளாகக் கலந்துகொண்டு மாணவர்களின் கல்வி வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று ஆறுமுகம் அழைப்பு விடுத்தார்.
மாரானில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஆறுமுகம் தமது துணைவியாருடன் வந்து கலந்துகொண்டார். மேலும், ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் தலைவர் சுரேன் கந்தா தனது துணைவியாருடன் கலந்துகொண்டார். துணை இயக்குநர் புகனேஸ்வரி, அவரது குடும்பத்தினர், நிலையத்தின் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

