பக்கத்தான் ஹராப்பான் நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது! அரசியல் பதவிகளை அதிகரிப்பதில் மட்டுமே தே.மு. கவனம் செலுத்துகிறது – ஸ்டீவன் சிம்

சிரம்பான் ஜூலை 28-
டிஏபி துணைப் பொதுச் செயலாளரும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சருமான ஸ்டீவன் சிம் சீ கியோங் (YB Steven Sim Chee Keong) இன்று வெளியிட்ட அறிக்கையில் 2018 முதல் நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹராப்பான் (PH) நிர்வாகம் சிறப்பான ஆட்சித் திறனை வெளிப்படுத்தி வருவதாகக் கூறினார்.

நேற்று இரவு திமியாங்கில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், PH ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நெகிரி மாநிலத்தின் நிதி நிலை தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், மாநிலத்தின் உபரி வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் உபரி வருவாய் RM203 மில்லியனை தாண்டியுள்ளது.

இது 2018ஆம் ஆண்டில் இருந்த RM140,000 உடன் ஒப்பிடுகையில் 1,449 மடங்கு அதிகரிப்பாகும்.

“அதேபோல், 2025ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் RM19 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது.

2018ஆம் ஆண்டில் அது RM2.9 பில்லியன் மட்டுமே இருந்தது. இது சுமார் 6.6 மடங்கு உயர்வாகும்.

“அதே காலகட்டத்தில், மாநில அரசின் கையிருப்பு நிதி RM688 மில்லியனிலிருந்து RM1 பில்லியனாக, அதாவது 45.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

“இந்த முதலீட்டு மதிப்பும், கையிருப்பு நிதியும் நெகிரி செம்பிலான் வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவாகும். இவை வெறும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல; பதிவுகளும் புள்ளிவிவரங்களும் மூலம் நிரூபிக்கக்கூடிய சாதனைகள்,” என்றார்.

இதற்கு மாறாக, ஜொகூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பாரிசான் நேஷனல் (BN) மக்கள் நலனையும் மாநில வளர்ச்சியையும் உடனடியாக முன்னெடுப்பதற்குப் பதிலாக அரசியல் பதவிகளை அதிகரிப்பதில் ஈடுபட்டதாக ஸ்டீவன் சிம் குற்றம் சாட்டினார்.

“புதிய மாநில அரசு உடனடியாக பணியில் இறங்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்தனர்.

“ஆனால், அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, அரசியல் நலன்களுக்காக 10 துணை ஆட்சிக்குழு உறுப்பினர் (Timbalan Exco) பதவிகளை உருவாக்கியது.

“பக்காத்தான் ஹராப்பான் மக்களின் நலனை மேம்படுத்த பாடுபடும்போது, அவர்கள் மக்களின் வரிப்பணியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் மேலும் 10 அரசியல் பதவிகளை உருவாக்கியுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பானுக்கு நிகரான நிர்வாகச் சாதனைகளை எதிரணியால் முன்வைக்க முடியாததால், அவர்கள் இனவாத உணர்வுகளைத் தூண்டி, டிஏபியைத் தாக்குவதன் மூலம் ஆதரவைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

“சீன சமூகத்தினரிடம் பேசும்போது, ‘அன்வார் இப்ராஹிம் சீனர்களின் நலனைப் பாதுகாக்கவில்லை’ என்று கூறுகிறார்கள்.

“ஆனால், பிற இன மக்களிடம் பேசும்போது, ‘அன்வார் டிஏபியின் கட்டுப்பாட்டில் உள்ளார்; அனைத்து வளங்களும் சீன சமூகத்திற்கே வழங்கப்படுகின்றன’ என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

“இதனால்தான் டிஏபியும் பக்காத்தான் ஹராப்பானும் இனம், மதம் பாராமல் அனைத்து மலேசியர்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், வரவிருக்கும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்கினால், அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதோடு, மாநிலத்தின் வளர்ச்சியையும் நிர்வாக நிலைத்தன்மையையும் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles