
ஷா ஆலம், அக். 6 – தங்கள் மகன் ஹரனேஷ் த/பெ முருகன் (வயது 10) எதிர்நோக்கியுள்ள இருதய குறைபாடு தொடர்பான சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கிய சிலாங்கூர் மாநில அரசுக்கு அந்த நான்காம் ஆண்டு மாணவரின் பெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஹரனேஷின் இருதய குறைபாடு பிரச்சனையை களைவதற்கு ஏதுவாக தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் (ஐ.ஜே.என்.) அறுவை சிகிச்சை மேற்கொள்ள தங்களுக்கு தேவைப்படும் 40,000 வெள்ளி மாநில அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ளதாக அச்சிறுவனின் தாயார் திருமதி கஸ்தூரிபாய் பெருமாள் (வயது 41) கூறினார்.
குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான ஹரனேஷ் தொடக்கத்தில் ஆரோக்கியத்துடன் காணப்பட்டார். எட்டு வயதான போது விளையாட்டில் ஈடுபடும் தருணங்களில் சற்று மூச்சு வாங்கியது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையை நாடிய போது இருதயத்தில் காணப்படும் குறைபாட்டை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்யும்படி அவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனை இருதய நோய் என கூற முடியாது. எனினும், இருதயத்தில் சதை போன்ற வளர்ச்சி காணப்படுவதால் மருத்துவர்கள் இருதயப் பிரச்சனை என வகைப்படுத்தியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் நான்காம் ஆண்டில் பயின்று வரும் ஹரனேஷ் தற்போது வழக்கமாக பள்ளிச் செல்லும் வேளையில் விளையாட்டுகளில் கலந்து கொள்வதை மட்டும் தவிர்த்து வருவதாக அவர் சொன்னார்.
பந்திங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான நலத் திட்டங்களில் பங்கு கொண்ட போது இது போன்ற மருத்துவ சிசிச்சைகளுக்கும் மாநில அரசு உதவும் என்ற தகவலை தாங்கள் அறிந்து கொண்டதாகப் பந்திங், ஜென்ஜாரோமை சேர்ந்த கஸ்தூரிபாய் குறிப்பிட்டார்.
உடனடியாக நாங்கள் அந்த நிதிக்கு விண்ணப்பம் செய்தோம். எங்கள் விண்ணப்பம் இரண்டே வாரங்களில் பரிசீலிக்கபட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஹரனேஷூக்கு இம்மாதம் 30ஆம் தேதி ஐ.ஜே.என்.இல் மேற்கொள்ளப்படவுள்ளது என அவர் சொன்னார்.
இந்த நிதியுதவிக்கு அங்கீகாரம் வழங்கிய மாநில அரசுக்கு குறிப்பாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டுவுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். இது போல் மருத்துவப் பிரச்சனையை எதிர்நோக்குவோர் தங்கள் வட்டார தலைவர்களை அணுகி இத்தகைய உதவிகளைப் பெறலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
இருதய பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் நான்காம் ஆண்டு மாணவரான எம். ஹரனேஷின் மருத்துவ சிகிச்சைக்காக சிலாங்கூர் மாநில அரசு 40,000 வெள்ளியை வழங்கி உதவியுள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு முன்னதாகக் கூறியிருந்தார்.
மாநில அரசின் சிலாங்கூர் இருதய சிகிச்சைத் திட்டத்தின் (பி40 பிரிவு) கீழ் செல்கேர் மேனேஷ்மேண்ட் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலாக இந்த நிதி ஹரனேஷுக்கு வழங்கப்பட்டதாக இன்று இங்குள்ள தமது அலுவலகத்தில் ஹரனேஷ் மருத்துவ உதவி நிதிக்கான ஒப்புதல் கடிதத்ததை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் போது அவர் குறிப்பிட்டார்
இம்மாணவரின் பெற்றோர்களான முருகன் மற்றும் திருமதி கஸ்தூரிபாய் ஆகியோர் பந்திங் தொகுதி வாக்காளர்களாகவும் உள்ளனர்.
அக்குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை நல்க வேண்டியது எனது தலையாய கடமையாகும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
thanks media selangor