
ஷா ஆலம், அக் 6: தொடர்ச்சியான வேலை வாய்ப்பு சந்தையை செயல்படுத்துவதன் மூலம் வேலையின்மை விகிதத்தை 1.5 சதவீதம் வரை குறைக்க சிலாங்கூர் இலக்கு வைத்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு ஆண்டுதோறும் 0.1 சதவீதமாக வேலையின்மை விகிதம் குறைய தொடங்கியது. அதன் அடிப்படையில் இந்த இலக்கை கொண்டதாக மனிதவள மேம்பாட்டு ஆணைய செயல்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார்.
இப்போது வரை இந்த விகிதம் தொடர்ந்து 1.9 சதவீதமாகக் குறைந்து வருகிறது. “அதாவது 112,000 பேரிலிருந்து, இது 88,000ஆகக் குறைந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து 50,000 வரை குறையும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
“வேலையின்மை விகிதத்தை பூஜ்ஜியமாகக் குறைப்பது சாத்தியமற்றது, ஆனால் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பு,” என்று அவர் இன்று சிலாங்கூர் சிறப்பு வேலை வாய்ப்பு சந்தையின் போது கூறினார்.
எம்பிஎஸ்ஏ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த திருவிழாவில் 40க்கும் மேற்பட்ட முதலாளிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வுமாற்றுத்திறனாளிகள், முன்னாள் கைதிகள் மற்றும் முதியவர்களையும் இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறன்களுக்கு ஏற்ப வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் வேலை வாய்ப்பு சந்தை வழங்குகிறது என்றும் பாப்பாராய்டு விளக்கினார்.