

பந்திங், அக். 6 – இவ்வாண்டு தீபாவளி ஜோம் ஷோப்பிங் திட்டத்தை முன்னிட்டு பந்திங் தொகுதியில் குறைந்த வருமானம் பெறும் பிரிவைச் சேர்ந்த 450 குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி மதிப்பிலான இலவச பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணி நேற்று பந்திங், எக்கோன்சேவ் பேரங்காடியில் நடைபெற்றது.
தொகுதி சேவை மைய பொறுப்பாளர்களிடம் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பேரங்காடியில் தீபாவளிக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டனர்.
இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பெருநாளைக் கொண்டாடுவதில் பரிவு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது என்று பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் தீபாவளியை மிகவும் அர்த்தமுள்ள விழாவாக கொண்டாடும் வகையில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது என மனித வளம் மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
பண்டிகையை கொண்டாடுவதில் எந்தத் தரப்பினரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதில் சிலாங்கூர் மாநில அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது.
மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் நல்வாழ்வுக்கு அடித்தளமாக இருக்கும் ஒற்றுமை மற்றும் அக்கறையின் உணர்வின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளது என்றார் அவர்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் பந்திங் தொகுதி சமூக சேவை மைய அதிகாரிகள், உள்ளூர் சமூகத் தலைவர்கள், நகராண்மைக்கழக உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத் தலைவர்கள் பெரும் பங்காற்றினர் என்றும் அவர் சொன்னார்.
இவ்வாண்டு பல தொகுதிகளில் தீபாவளி பற்றுச் சீட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பாப்பாராய்டு முன்னதாகக் கூறியிருந்தார். குறிப்பாக பந்திங் தொகுதிக்கு கடந்தாண்டு 400 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 450 உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
இவ்வாண்டு பற்றுச் சீட்டுகளின் எண்ணிக்கையை 22,150 ஆக அதிகரித்துள்ளோம். இதற்காக 44 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.