மலேசிய இந்தியர்களின் இறுதி சடங்கில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் – மலேசிய இந்து சங்கம் கண்டனம்

பெட்டாலிங் ஜெயா அக் 8 : மலேசிய இந்திய சமூகத்தில் நடைபெறும் சில இறுதிச் சடங்குகளில் இடம்பெறும் மது அருந்துதல், சூதாட்டம், பட்டாசு வெடித்தல், அனுமதியற்ற ஊர்வலங்கள், அதிகச் சத்தமுள்ள இசை மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்கு மலேசிய இந்து சங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இறுதிச் சடங்குகள் மறைந்தவரின் ஆத்ம சாந்திக்கான புனிதமான மதக் கடமையாகும் என்றும், இத்தகைய முறையற்ற செயல்கள் சடங்கின் புனிதத்தை அழித்து, சமூகத்தில் கண்ணியமின்மை, சட்டரீதியான சிக்கல்கள், பிற சமூகங்களிடம் மரியாதை குறைவு மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்குத் தவறான முன்மாதிரி போன்ற பெரும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மலேசிய இந்து சங்கம் எச்சரிக்கிறது.

மேலும், இத்தவறுகள் தொடர்ந்தால் அரசு, சமுதாய அமைப்புகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீகாசி சங்கபூஷன் தங்க கணேசன் அவர்கள், இறுதிச் சடங்குகளை ஆகம சாஸ்திரம், மத ஒழுங்கு மற்றும் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, சுத்தம், அமைதி மற்றும் ஆன்மீகச் சூழலுடன் மட்டுமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குடும்பத்தினர், சமூகத் தலைவர்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் சடங்கு சேவை வழங்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இத்தவறுகளைத் தடுத்து, அரசின் விதிகளை மதித்துச் சடங்குகளை நடத்துவதன் மூலம் நம் சமூகத்தின் மரியாதையையும், மதச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles