
ஈப்போ,அக்11: இருள் மறைந்து ஒளி பிறக்கும் தீபாவளி திருநாளில் 83 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவிருக்கும் மகிழ்ச்சியான தகவலை மாநில இந்தியர் நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் தெரிவித்தார்.
சுமார் 60ஆண்டுக்காலம் நிலப்பட்டா இன்றி அரசு நிலங்களில் வசித்து வந்தவர்களுக்கு அவர்களின் இத்தனை ஆண்டுக்கால நிலப்பட்டா பிரச்னைகளுக்கு மூன்றாண்டில் தீர்வு பிறந்திருப்பதாகவும் மாநில சுகாதாரம்,மனிதவளம் மற்றும் ஒருமைப்பாடு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர் வருகின்ற வெள்ளிக்கிழமை (10.10.2025),பிற்பகல் 3.00மணிக்கு ஊத்தான் மெலிந்தாங் சன்மார்க்கம் கட்டடத்தில் நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு வசந்தி அவர்களின் தீபாவளி அன்பளிப்பு மற்றும் திறந்த இல்ல உபசரிப்பின் போது கம்போங் சுங்கை தீமா வாழ் மக்கள் 45 பேருக்கு நிலப்பட்டா வழங்கப்பட விருப்பதாக தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் முன்பு தோட்டங்களில் வசித்தவர்கள்.பணி ஓய்விற்கு பின்னர் அரசு நிலங்களில் வீடு கட்டி குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் பீடோரில் மாண்புமிகு அ.சிவநேசனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின் போது தாப்பா,பீடோர் மற்றும் சுங்கை ஆகிய வட்டாரங்களில் சுமார் 58 நிலப்பட்டக்கள் வழங்கப்படும் நிலையில் 38 இந்தியர்களுக்கும் நிலப்பட்டா வழங்கப்பட விருப்பதாகவும் கூறிய சிவநேசன் நிலப்பட்டா பெறுபவர்களில் பெரும்பான்மையோர் தாப்பா வட்டாரத்தை சார்ந்தவர்கள் என்பதையும் நினைவுறுத்தினார்.
பேரா மாநிலத்தில் சுமார் 50ஆண்டுகள் கடந்து நீடித்து வந்த நிலப்பட்டா பிரச்னைகளுக்கு இந்த மூன்றாண்டில் நிறைவாகத் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் இவ்வாண்டு தீபாவளி இந்தியர்களின் வாழ்வில் ஒளியேற்றும் திருநாளாக உயிர்பெற்றிருப்பதாகவும் சிவநேசன் குறிப்பிட்டார்.
மேலும்,பீடோரில் நடைபெறும் திறந்த இல்ல உபசரிப்பின் போது “Jualan Rahmah” விற்பனைச் சந்தையோடு ஆடல் பாடல்,சுவைமிகு உணவுகளும் பரிமாறப்படும் என்றும் சிவநேசன் நினைவுக்கூர்ந்தார்.
அதேவேளையில்,மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாண்புமிகு சிவநேசனின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் நிலப்பட்டா வழங்கப்படும் நிலையில் பள்ளிகள்,ஆலயம் மற்றும் பொது அமைப்புகளுக்கும் மானியமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பீடோர் டேவான் முஹிபாவில் சனிக்கிழமை (11.10.2025) மாலை மணி 6.00 தொடங்கும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிற்கு மாண்புமிகு சிவநேசனுடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்,அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் பொது மக்களும் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் அன்பு அழைப்பும் விடுத்தார்.