
சுங்கை,அக்.11: வாசிப்பு பழக்கம் மாணவர் பருவத்திலேயே ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று.ஆரோக்கியமான சிந்தனையின் மூலதனமே வாசிப்புத்தான் என்றும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான் சிவாலெனின் நினைவுறுத்தினார்.
ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்பார்கள்.எனவே,நூலகம் என்பது ஒரு மாணவனின் எதிர்காலத்தை நம்பிக்கையான இலக்கிற்கு இட்டுச் செல்லும் மாபெரும் சக்தியென்றும் அவர் மேலும் கூறினார்.
சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய நூலகத்தை திறந்து நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்ற உறுப்பினருமான அவர் இதனை எடுத்துரைத்தார்.
மேலும்,மாணவர்கள் மத்தியில் உயிர்பெறும் வாசிப்பு பழக்கம் அவர்களைச் சிறந்த மனிதர்களாக உருவாக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.
மாணவர் குறைவான பள்ளியாக இருந்தாலும் பள்ளியின் நூலகம் சிறந்த சூழலைக் கொண்டிருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கும் நூலகப் பொறுப்பாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமின்றி அதற்கு உறுதுணையாகவும் திகழும் தலைமையாசிரியர்களுக்கும் சிவாலெனின் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
அதேவேளையில்,இப்பள்ளி நூலகத்திற்கு சிறார் இலக்கியம் சார்ந்த புத்தகங்களோடு கதை,கட்டுரை நூல்களையும் அன்பளிப்பாக வழங்குவதாகவும் சிவாலெனின் உறுதி அளித்தார்.
அதுமட்டுமின்றி,நன் சூழலில் அமைக்கப்பட்டிருக்கும் பள்ளி நூலகத்தை மாணவர்கள் சிறந்த நிலையில் பயன்படுத்தின்கொள்ளவும் வேண்டும் எனவும் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் மேலோங்குவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
முன்னதாக தலைமையுரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் இராமகிருஸ்ணன் பள்ளி நூலகத்திற்கு புத்துயிர் அளித்திருக்கும் நூலகப் பொறுப்பாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி கூறியதோடு நூலகத்திற்கான நன்சூழலுக்கு நிதியுதவி அளித்த திரு.ஜெயகுமார் கண்ணன் அவர்களுக்கும் நன்றியை பதிவு செய்து கொண்டார்.
ஆசிரியை லிண்டா அம்புரோஸ் அவர்களின் பெரும் முயற்சியில் கிடைக்கப்பெற்ற நல்லுள்ளத்தின் நிதியுதவியால் இப்பள்ளியின் நூலகம் புதிய தோற்றத்தோடு மிளிர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.