

பிறை, அக் 12-
புதிய வீட்டில் தீபாவளி கொண்டாடவிருப்பதால் பைராம் தோட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர் என்று பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தெரிவித்தார்.
பைராம் தோட்ட மக்களுக்காக நிபோங் திபாலில் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பினாங்கு மாநில அரசாங்கத்தின் முயற்சியில் கட்டப்பட்ட இவ்வீடுகளின் சாவியை நேற்று முதலமைச்சர் சாவ் கோன் இயோவிடம் பாட்டாளிகள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் 40 வருடங்களாக தோட்டத்தில் வசித்து வந்த பிறகு, தானும் தனது கணவரும் நான்கு குழந்தைகளும் ஒரு புதிய வீட்டில் தீபாவளியைக் கொண்டாட முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாக 61 வயதான எஸ். மல்லிகா கூறினார்.
சாவியை பெற்ற 48 வயதான ஏ. செல்வதுரை, தோட்ட வீட்டில் 20 வருடங்கள் வசித்து வந்த பிறகு, தானும் தனது மனைவியும் நான்கு குழந்தைகளும் ஒரு புதிய வீட்டில் தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.
47 வயதான எட்வர்ட் ராஜா, இந்த ஆண்டு தீபாவளி நிச்சயமாக மிகவும் இனிமையான பண்டிகையாக இருக்கும் என்று கூறினார்.
முன்னதாக 18.4 மில்லியன் ரிங்கிட் செலவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், 68 தரை வீடுகள், இரண்டு மாடி பள்ளி, ஒரு ஆலயம் ஆகியவை கட்டப்பட்டதாக முதலமைச்சர் சோவ் கூறினார்.
அடையாளம் காணப்பட்ட 72 குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை வழங்க மாநில அரசு முடிவு செய்தது.
தங்களுக்கு புதிய வீடுகள் கிடைக்க உதவிய பினாங்கு மாநில அரசுக்கு அவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.