
மலேசியா இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் அவர்கள் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பூஜை பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புப் பொதிகளில் (packaging) தெய்வங்களின் படங்களை அச்சிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
நாம் தினசரி பயன்படுத்தும் பூஜை பொருட்கள், உதாரணமாக அகல், தீபம், குங்குமம், சந்தனம், சாம்பிராணி போன்றவற்றின் பொதிகளில் தெய்வப்படங்கள் அச்சிடப்படுவது ஒரு தவறான நடைமுறையாகும். மக்கள் அந்தப் பொருட்களை பயன்படுத்திய பின் அந்தப் பொதிகளை தூக்கி எறிவதால், அந்தத் தெய்வப் படங்கள் தரையில் விழுந்து அவமதிக்கப்படுகின்றன. இது நமது இந்து மத ரீதியில் ஒரு தவறான செயல் என்பதால், தயாரிப்பாளர்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
இன்றைய சந்தையில் பல சாம்பிராணிகள் இயற்கை மூலப்பொருட்கள் இல்லாமல், ரசாயனக் கலவைகளால் தயாரிக்கப்படுகின்றன. இவை புகை மற்றும் செயற்கை வாசனை மட்டுமே அளிக்கின்றன; ஆன்மிக அல்லது ஆரோக்கிய நன்மைகள் கிடையாது. மாறாக, இந்த ரசாயனச் சாம்பிராணிகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. ஆகையால், தயாரிப்பாளர்கள் இயற்கையான மூலப்பொருட்கள் பயன்படுத்தி உண்மையான சுத்தமான சாம்பிராணி தயாரிக்க வேண்டும்.
இந்து மதத்தில் பூஜை என்பது ஒரு புனிதமான ஆன்மிகச் செயல். அதில் பயன்படுத்தப்படும் பொருட்களும் புனிதமாகவும் இயற்கையாகவும் இருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் லாப நோக்கில் மட்டும் அல்லாமல், மதப் பண்பாட்டையும் மதிப்புடன் காக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.”
மலேசிய இந்து சங்கம் அனைத்து பூஜை பொருள் தயாரிப்பாளர்களும் இந்த அறிவுரையை மதித்து, தங்களது தயாரிப்பு முறைகளில் தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நன்றி. வணக்கம்
……………………………………………………..
ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் AMN., ASA
தேசியத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்

