ஜசெக கட்சியின் 60ஆவது ஆண்டு விழா: டிஏபி உறுப்பினர்கள் பணிவைத் தொடர வேண்டும் என ஙா கோர் மிங் வலியுறுத்தல்

புக்கிட் மெர்தாஜாம், ஏப் 21 –

ஜெசெக கட்சியின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அனைத்து டிஏபி உறுப்பினர்களும் “பணிவுடன் இருத்தல், வெற்றிக்கான தாகத்துடன் இருத்தல் மற்றும் மக்களுக்குச் சேவையாற்றுவதில் கவனம் செலுத்துதல்” ஆகிய கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ஙா கோர் மிங் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஙா, டிஏபி கட்சியின் ஆறு தசாப்த கால பயணத்தை நினைவு கூர்ந்தார்.

கட்சி முதிர்ச்சியான, பொறுப்பான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சியாக இருந்த ஆரம்ப நாட்களிலிருந்து இன்று அரசாங்கத்தில் எங்கள் பங்கு வரை… ஜனநாயகம், நீதி, நல்லாட்சி மற்றும் அனைத்து மலேசியர்களுக்குமான சமத்துவத்தைப் பாதுகாப்பதே எங்கள் முக்கிய நோக்கம் மாறாமல் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இனம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களின் அபிலாஷைகளை பிரதிநிதிக்கும் ஒரு பல்லினக் கட்சியாக இருப்பது டிஏபி-யின் பலம் என்று ஙா கூறினார்.

கட்சியின் பங்களிப்பு, வாதப் பிரதிவாதங்களிலிருந்து அரசாட்சிக்கு மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சருமான அவர், தனது தலைமையின் கீழ் அமைச்சின் முக்கிய சாதனைகளையும் பகிர்ந்து கொண்டார்.

அவரது கூற்றுப்படி, மலேசியா வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 241.9 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்து பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது. இது தவிர, நாடு தழுவிய அளவில் 500,000 மலிவு விலை வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 15,083 உள்கட்டமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப் பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.

இது அனைத்து உள்ளூராட்சி மன்ற மட்டங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மடாணி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

“மேலும், நாடு முழுவதும் சிக்கலுக்குள்ளான மற்றும் கைவிடப்பட்ட 1,501 வீட்டுத் திட்டங்களை நாங்கள் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளோம். இதன் மூலம் 180,000 வீடு வாங்குபவர்களிடையே நம்பிக்கையை மீட்டெடுத்து, கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மீண்டும் செயல்படுவதை உறுதி செய்துள்ளோம்.”

“இவை மக்களுக்கு உண்மையான தீர்வுகளை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் உறுதியான முடிவுகள்,” என்று அவர் கூறினார்.

— பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles