
சிரம்பான்,நவ17- மலேசிய வரலாற்றில் மறந்து போன தோழிற்சங்கவாதியும் மண்ணின் விடுதலைக்காகவும் போராடியவர்களில் ஒருவரான மலாயா கணபதியை மீட்டெடுக்கும் முயற்சியாக சிவாலெனின் எழுதிய மலாயா கணபதி (வாழ்வும் போராட்டமும்) நூல் வெளியீடு சிரம்பானில் கூகை பதிப்பகத்தின் ஏற்பாட்டில் கருவின் பிரபஞ்ச மையம் ஆதரவோடு சிறப்பாக நடைபெறவுள்ளது.
தோட்டத் தொழிலாளர் உரிமைக்காகவும் அவர்களின் அடிப்படை வசதிகள்,தேவைகளுக்காகத் தொழிற்சங்கம் வாயிலாக போராடிய தொழிற்சங்கவாதியும் பிரிட்டிஷ் காலனித்துவ அரசிற்கு எதிராக அன்றய மலாயாவின் விடுதலைக்கும் முழக்கமிட்ட மலாயா கணபதியின் வரலாற்றை பேசும் இந்நூல் வெளியீடு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் வருகின்ற 22.11.2025,சனிக்கிழமை மதியம் 2.45க்கு நடைபெறவுள்ளது.
சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பி.குணசேகரன் அவர்களின் சிறப்புரையோடு எழுத்தாளர் எம்.கே.கருணாகரன் மற்றும் தெள்ளியர் ஒன்றியம் தலைவர் திரு.எழில் ஆகியோரின் வாழ்த்துரைகளோடு இந்நூல் வெளியீடு நடைபெறுகின்ற நிலையில் எழுத்தாளர் காந்திமுருகன் நூல் அறிமுகமும் ஆசிரியர் கவிஞர் தில்லை நடராஜன் நூலாசிரியர் அறிமுகம் செய்வார்.
மலாயா கணபதி,பி.வீரசேனன்,அந்தோணிசாமி,சாம்பசிவம்,மலாயா சக்திமோகன் என நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் முதலாளிகளுக்கு எதிராகவும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராகவும் போராடிய எண்ணற்றவர்களின் தகவல்கள் அடங்கியிருக்கும் இந்நூல் 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் நாட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களையும் விடுதலை நகர்வுகளையும் பதிவு செய்துள்ளது.
சிறப்பான நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் வெளியீடு எழுத்தாளர்கள்,படைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள்,ஆசிரியர்கள்,பொது மக்கள்,வரலாற்று ஆர்வலர்கள் என அனைவரும் திரளாக கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்நூல் வெளியீடு குறித்த கூடுதல் தகவல்களுக்கு 016 – 5684302 (சிவாலெனின்) அல்லது 011-10782750 ( எம்.கே.கருணாகரன்) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

