
கோலாலம்பூர், நவ 23-
மகள் பிரசான்னாவை மீட்கும் போராட்டத்தில் இறங்கி உள்ள இந்திரா காந்தியின் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அதன் தற்போதைய உண்மை நிலை பொது வெளியில் மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோக பால மோகன் கேட்டுக் கொண்டார்.
இந்திரா காந்தியின் விவகாரத்தில் நாம் எப்போதுமே போலீஸ் படையையும் உள்துறை அமைச்சையுமே குறை சொல்லி கொண்டிருக்கிறோம்.
ஒரு குற்றவாளியை இரண்டு வாரங்களில் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் போலீஸ் படை முகமட் அப்துல்லா ரிடுவானையும் பிரசன்னா டிக்ஷாவையும் இன்னமும் தேடி கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆனால் இவ்விவகாரத்தில் ஒற்றுமை துறை அமைச்சு, மகளிர், குடும்ப, , சமூகநல அமைச்சு ஆகியவை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
இந்திரா காந்தியின் விவகாரம் குடும்ப நலன் சார்ந்த விவகாரம் ஆகும். ஆனால் இந்நாள் வரையிலும் மகளிர், குடும்ப, சமூக நலத்துறை அமைச்சின் பங்ளிப்பு என்ன?
அதேபோன்று தான் ஒற்றுமை துறை அமைச்சும் தனது பங்களிப்பை கடமையை எவ்வாறு செய்துள்ளது?
இந்திரா காந்தியின் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்விவகாரத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மக்களும் ஆர்வமாக உள்ளனர் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

