



ஈப்போ, நவ. 25: நாடறிந்த செபஸ்தியர் கலைக்கூடம் முதல் முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான குறும் நாடகப் போட்டி ஈப்போ கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக தமிழகத்தின் ராஜ் தொலைக்காட்சியின் நிறுவனர் டாக்டர் ரவிந்திரன், உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் இளங்கோவன் மற்றும் செல்லப்பா நிறுவன உரிமையாளர் விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
மலேசிய இந்திய இளைஞர்களின் படைப்பு உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக தமிழக ராஜ் டிவி நிறுவனர் டாக்டர் ரவீந்திரன் இந்நிகழ்வை காண அழைக்கப்பட்டதாக ஏற்பாடடுக்குழு
தலைவர் செபஸ்தியர் இருதயம் கூறினார்.
தமிழ்நாட்டிற்கு அடுத்து அதிகமான தமிழ்ப்பள்ளிகளைக் கொண்ட நாடாக மலேசியா திகழ்கிறது.
இங்குள்ள தமிழ்ப்பள்ளிகள் வாயிலாக தமிழ்மொழி மேம்பாடு கண்டு வருகிறது. இங்குள்ள மாணவர்கள் கலைத்துறையில் மிகவும் சிறந்தவர்கள்.
இவர்களின் படைப்புகள் திறமைகள் உலகம் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுவதாக அவர் சொன்னார்.
மலேசிய இந்தியர்கள் தமிழ்மொழிக்கு முன்னுரிமையும், முக்கியதுவமும் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, இங்குள்ள இளைஞர்களின் கலைப்படைப்பு ராஜ் டிவி மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க உதவிடுவோம். இதன் வாயிலாக அவர்களது வாழ்வாதாரம் மேம்பாடு காணும் என்று டாக்டர் ரவீந்திரன் உறுதியுடன் கூறினார்.
குறும் நாடக வடிவில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை சிறப்பாக படைத்தனர் என்றும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தமிழ் என்ற நிலைப்பாட்டை இங்குள்ள இந்தியர்களிடையே காண முடிகிறது.
அத்துடன், சினிமாத்துறைகளில் தடம் பதிப்பதற்கு முன்னதாக நாடகத்துறையில் களம் காண்பது அவசியம் என்று உலகத் தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் இளங்கோவன் குறிப்பிட்டார்.
இங்கு நடைபெற்ற குறும் நாடகப்போட்டியில் மெங்களம்பு, ஈவுட், சுங்கை ரேலா மற்றும் சுங்கை சிப்புட் காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளிகள் பங்குபெற்றன.
அவற்றில், ஈவுட் தமிழ்ப்பள்ளி இரு படைப்புகள் வழங்கினர். பங்கு பெற்ற பள்ளிகளுக்கு 500 ரிங்கிட்டும், மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன.
சிறந்த நடனத்தை வழங்கிய சித்தியவான் மகா கணேசா தமிழ்ப்பள்ளிக்கும் இத்தகைய உதவிகள் நல்கப்பட்டன. இப்போட்டியின் நீதிபதியாக முனைவர் சேகர் நாராயணன் பொறுப்பு வகித்தார்.
நிறைவு விழாவில் உலக தமிழ் சங்க சாதனயாளர் விருது டாக்டர் ரவீந்திரன் மற்றும் டாக்டர் செபஸதியர் ஆகியோருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
மேலும் இதர பிரமுகர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.

