
கோலாலம்பூர், டிச 2-
நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திருவள்ளுவரை மதிக்கும் போது தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலை இருந்தால் என்ன குற்றம் என்று மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கேள்வியை எழுப்பினார்.
தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலை இருக்கக் கூடாது என ஜொகூர் மாநில கல்வி இலாகா சுற்று அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது இந்திய சமுதாயத்திடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுகிறார்.
மேலும் திருக்குறளின் விளக்கத்தை மலாய் மொழியில் விளக்குவார்.இந்தவொரு சூழ்நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலை இருக்கக் கூடாது என்றால் அதை நம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆக ஜொகூர் மாநில கல்வி இலாகாவின் இந்நடவடிக்கையை மஹிமா வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் சொன்னார்.கல்வி இலாகாவிற்கும் ஒரு கடிதத்தையும் மஹிமா அதிகாரப்பூர்வமாக அனுப்பும்.
தமிழ்ப்பள்ளிகளின் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு ஆபத்து என்றால் மஹிமா ஒருபோதும் பார்த்து கொண்டிருக்காது. இதற்காக போராட்டம் நடத்தவும் தயங்காது என டத்தோ சிவக்குமார் கூறினார்.

