
சபாவுக்கும், மொத்தமாக மலேசியாவுக்கும் பெரிய இழப்பாக இருக்கும் டத்தோ ஸ்ரீ பங்ளிமா புங் மொக்தார் ராடின் அவர்களின் மறைவு செய்தி எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கும் சொந்தங்களுக்கும் பி.பி.பி. மலேசியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
1999-ஆம் ஆண்டு முதல் தொடர் ஆறு தவணைகளாக கினபாத்தாங்கான் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, அந்தத் தொகுதியில் நீண்டகாலம் பணியாற்றிய மிகச் சிறந்த தலைவர் என்ற பெருமையை டத்தோ ஸ்ரீ பங்ளிமா புங் மொக்தார் ராடின் பெற்றார்.
இந்தச் சாதனை, அவர் மக்களிடையே பெற்றிருந்த நம்பிக்கையையும் அவரின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
சபாவில் அரசியல் சூழ்நிலை மாற்றமடைந்த கடினமான காலகட்டத்தில், பலர் கட்சியை விட்டு விலகியபோதிலும், டத்தோ ஸ்ரீ பங்ளிமா புங் மொக்தார் ராடின் உறுதியுடன் முன்வந்து பாரிசான் நேஷனல் (BN) சபா தலைவர் மற்றும் அம்னோ சபா தலைவர் என்ற பொறுப்புகளை ஏற்று, கட்சி நிலைப்பாட்டையும் திசையையும் உறுதிப்படுத்தினார்.
அவர் இறக்கும் வரை இந்தப் பொறுப்புகளை நேர்மையாக மேற்கொண்டார் என்பது அவரது தலைமைத்துவத்தின் வலிமையைக் காட்டுகிறது.
அரசியல் மாற்றங்கள் இருந்தபோதிலும், மக்களின் ஆதரம் அவருக்கு தொடர்ந்து இருந்து வந்தது. சமீபத்திய 17-வது சபா மாநிலத் தேர்தலில் (நவம்பர் 2025), அவர் தனது லாமாக் மாநிலத்தொகுதியையும் வெற்றிகரமாக தக்கவைத்தார்.
இது மக்களின் நிலையான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
தன்னடக்கம், தெளிவான பேச்சு, கேட்ட இடத்தில் தைரியமாக கருத்து சொல்வது போன்ற தனது தனிப்பட்ட பாங்கால் அவர் மலேசிய அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் அனைவரும் அறிந்த தலைவராகத் திகழ்ந்தார்.
பி.பி.பி. மலேசியா சார்பில், அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினர் இந்தக் கடினமான காலத்தை சமாளிக்கத் தேவையான வலிமையும் தைரியமும் பெறவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.
டத்தோ டாக்டர் லோகா பாலா மோஹன்
தேசிய தலைவர், பி.பி.பி. மலேசியா

