
புத்ராஜெயா, டிச 5-
மலாக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முழுமையான வெளிப்படையான விசாரணை நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த உத்தரவை பெரிதும் வரவேற்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
பிரதமரின் இந்த உத்தரவு ஒரு தெளிவான மற்றும் வலுவான செய்தியை பறைசாற்றுகிறது.
போலீஸ் தங்கள் பொறுப்பில் உறுதியுடன் இருந்து சட்டங்களை அமல்படுத்த வேண்டியது அவசியமானாலும், போலீசார் பொறுப்புடைமை மற்றும் சட்டத்தை முறையாக நிலை நிறுத்துவதில் அரசு மிகுந்த தீவிரத்துடன் கண்கானிப்பதை இது புலப்படுத்துகிறது.
இந்த சம்பவத்தில் பிரதமரின் உறுதிப்பாடு மிக முக்கியமானது, குறிப்பாக சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்ட புகார்களில் எந்தவொரு அதிகாரியும் பாதுகாக்கப்படக்கூடாது என்று தேசிய காவல் துறை அதிகாரியை அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் உறுதிப்பாடு மிகவும் முக்கியமானது, குறிப்பாக சட்டத்துக்குப் புறம்பாக நடந்ததாக உறுதிப்படுத்தப்படும் எந்த அதிகாரிக்கும் பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்று தேசிய போலீஸ் தலைவருக்கு அவர் வலியுறுத்தியிருப்பது இதைத் தெளிவாக காட்டுகிறது.
இந்த உறுதியான நிலைப்பாடு, மக்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும், நாட்டில் நீதி மற்றும் பொறுப்புணர்வின் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கும் மிக முக்கியமானதாகும்.
இன்று காலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மலாக்கா துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சுற்றியுள்ள முரண்பட்ட தகவல்களினால் உருவாகியுள்ள சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய அவசியத்தை நான் முன்வைத்தேன் என்றார் அவர்.
சட்ட அமைப்புகள் மேற்கொள்ளும் அத்துமீறல்கள், வன்முறை தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பி வருகிறோம்.
இத்தகைய பிரச்சினைகளுக்கு உடனடியாகவும் தீர்மானமான முறையிலும் முடிவு காணப்பட வேண்டும். மலேசியாவில் காவல் நிலையங்களில் நடந்துகொள்ளும் துஷ்பிரயோகம் அல்லது மரணங்களுக்கு இனி இடம் இல்லை என அமைச்சர் திட்டவட்டமாக கூறினார்.
எனவே, பிரதமரின் உத்தரவை உறுதியான நடவடிக்கையாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய காவல்துறைத் தலைவரை நான் கேட்டுக்
கொள்கிறேன்.
இது போன்ற அனைத்து வழக்குகளிலும் வெளிப்படையான, நேர்மை அடிப்படையிலான விசாரணைகளை எந்த தாமதமும் இல்லாமல் நடைபெறுவது அவசியம்.
கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மீறியவர்கள் அல்லது சட்டத்தின் வரம்பு மீறி, செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

