
கோலாலம்பூர் – ஜன 1
மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன், புதிய ஆண்டை முன்னிட்டு நாட்டில் ஒற்றுமையும் நிலைத்தன்மையும் நிலவ வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டார்.
தனது புத்தாண்டு வாழத்து செய்தியில், 2026 ஆம் ஆண்டு நாட்டிற்கு புதிய நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
“தற்போதைய அரசியல் சூழல் அதிகமாகப் பிளவுபட்ட நிலையில் உள்ளது. நாட்டை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக அரசியல் ஆதிக்கமே முன்னிலை பெறுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.
தலைவர்கள் அரசியல் லாபங்களை விட நாட்டின் ஒற்றுமையையும் மக்களின் நலனையும் முதன்மையாகக் கொள்ள வேண்டும்,” என அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் நாட்டின் நிலைத்தன்மையை பாதித்ததுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“அரசியல் நிலைமையால் உருவான குழப்பங்களை சமாளிப்பதற்கே அதிக நேரமும் வளங்களும் செலவிடப்பட்டுள்ளன.
இனி நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு புதிய சிந்தனை, பொறுப்புள்ள தலைமையமைப்பு மற்றும் தேசிய ஒற்றுமையை கொண்டு வர வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பிபிபி எதிர்கொண்ட சவால்களுக்கிடையிலும் தொடர்ந்து ஆதரவு வழங்கிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இறுதியாக, அனைத்து மலேசியர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்த அவர், புதிய ஆண்டு அமைதி, முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையை கொண்டு வர வேண்டும் என வாழ்த்தினார்.

