
புத்ராஜெயா, ஜனவரி 8- தொழிலாளர் நீதி கிடைப்பதை மேம்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான நேரத்தையும் செலவுகளையும் குறைக்கவும், நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தீபகற்ப மலேசிய தொழிலாளர் துறையின் கீழ், சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்ட மூன்று வாகனங்களுடன் இந்த முயற்சி தொடங்கும் என்றும், கிராமப்புற பகுதி மக்களுக்கு அல்லது தற்போதுள்ள தொழிலாளர் நீதிமன்ற வசதிகளை அணுகுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு சேவைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
“இந்த திட்டத்திற்கு RM5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும். ஆகஸ்ட் மாதத்திற்குள் இத்துறையின் செயல்பாட்டுத் திட்டத்தை இறுதி செய்யவும், நடமாடும் நீதிமன்றம் குறித்த தகவல்கள் பரவலாக சென்றடைவதை உறுதி செய்யவும் உதவும்,” என்று இன்று இத்துறைக்கு வருகை தந்த பிறகு அவர் கூறினார்.
மேலும் தொழிலாளர்கள் நீதிமன்றம் எங்கு அமையும் என்பதையும், சேவைகள் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதையும் அறிவார்கள் என்றார். அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் திறம்பட செயல்படுத்த நேரம் எடுக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
“நடமாடும் தொழிலாளர் நீதிமன்றம், குறிப்பாக கிராமப்புற மற்றும் உட்புற பகுதிகளில், தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நேரத்தையும் செலவுகளையும் மிச்சப்படுத்தும் அதே வேளையில், மக்கள் நட்பு முறையில் தொழிலாளர் நீதி கிடைப்பதை மேம்படுத்தும்,” என்று அவர் தெரிவித்தார். தொழிலாளர் நீதிமன்றங்களில் டிஜிட்டல் பதிவு அமைப்புகளை நிறுவுவதன் மூலம் அவற்றை வலுப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

