
கோலாலம்பூர் பிப் 27-
நூறாண்டு காலம் ஞாலம் அளந்தீரே!
நூலோர் புகழும் மாண்பு கொண்டீரே!
பதினெண் அகவையிலே செங்கொடி ஏந்தி
பாமரர் வாழ்வுயரப் பாதை சமைத்தீரே!
வெள்ளையர் ஆதிக்க வேரறுக்கச் சிறைசென்று
விடுதலைத் தீயினில் மெய் வருத்தினீரே!
விளிம்புநிலை மாந்தரின் விழிநீர் துடைக்க
வாழ்வெலாம் ஈந்து வையகம் வென்றீரே!
சொல்லும் செயலும் சற்றும் பிளவின்றி
துறவிபோல் வாழ்ந்த தூய பொதுவுடைமையே!
சாதிய இருளைச் சமத்துவத் தீயால்
சுட்டெரித்த எங்கள் குமுகப் போராளியே!
வெற்றியும் தோல்வியும் வீணெனத் தள்ளி
மக்கள் பணியே மாமருந்தெனக் கொண்டீரே!
சந்திக்க நேர்கையில் நூல்களைத் தந்து
சிந்தையைச் சீர்செய்த செம்மல் நீரே!
நூற்றாண்டு கண்ட எம் தமிழ் இனத்தின் மூத்தவரே!
நும் பிரிவால் இன்று வையகம் வாடுதே!
மலேசிய மண்ணும், உலகத் தமிழினமும்
மாளாத் துயரில் கண்ணீர் சிந்துதே!
அறம் தழைக்க வாழ்ந்த ஆசானே!
எம் நெஞ்சில் என்றும் உம் புகழ் நிலைக்கும்!
உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் தலைவணங்கும்!
சென்று வருக ஐயா!
செம்மொழி வணக்கங்கள்!

