
கோலாலம்பூர், மார்ச் 1-
உடைபடும் அபாயத்தில் உள்ள கோவில்களை காப்பாற்ற இந்திய சமுதாயம் ஓர் அணியில் திரள வேண்டும் என்று பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி கேட்டுக் கொண்டார்.
நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து நாம் ஓர் அணியில் திரள வேண்டும்.
சட்டவிரோத கோவில் என்று கூறி இப்போது கோவில்களை இடிக்கும் பணி தொடங்கி உள்ளன.
ஆகவே இந்த கோவில்களை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்தியர்கள் கோவில்களை கட்டி வழிபட்டு வந்தனர்.
தோட்டங்கள் மேம்பாட்டு திட்டத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் அந்த கோவில்கள் அதே இடத்தில் இன்னமும் உள்ளது.
இந்த கோவில்கள் திடீரென கட்டப்பட்டவை அல்ல. சுதந்திரத்திற்கு முன்பு உருவானவை.
இந்த கோவில்களை சட்டவிரோத கோவில்கள் என்று முத்திரை குத்துவதை அனைத்து தரப்பினரும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் மலேசிய இந்தியர்கள் உரிமை மீதான சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சமூக வலைதளங்களில் பிரபலமான சுதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற சதீஷ் முனியாண்டி, சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் ரோனி லியூ, பிரபல வழக்கறிஞர் சித்தி காசிம், ராஜேஷ், டாக்டர் நெல்சன் முருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

