
சென்னை, மார்ச் 1-
தமிழ் திரையுலகில் ஆன்மீகமும் வரலாற்றுப் பெருமையும் சங்கமிக்கும் வகையில் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் சுவாமி ஐயப்பனை மையமாகக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு படங்களின் தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.
தயாரிப்பாளர் JK சரவணா, முன்னதாக சென்னை 600028 உள்ளிட்ட படங்களில் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியவர். தற்போது முழுமையான தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள முதல் படம் “தத் த்வம் அஸி” (Tat Twam Assi). சமகால பின்னணியில் உருவாகும் இந்த ஆன்மீக ஆக்ஷன் திரைப்படம், ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம், அவரது நம்பிக்கை மற்றும் பக்தி உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகிறது.
100 கோடி ரூபாய் வசூலை கடந்த மாளிகப்புரம் படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இரண்டாவது படம் “ஆர்ய கேரள வர்மன்”. 16ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியில், சுவாமி ஐயப்பனின் வீரமும் ஆன்மீகத் தத்துவமும் பேசப்படும் பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமாக இது உருவாகிறது. இந்தப் படத்தை JK சரவணா மற்றும் ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகின்றனர்.
இரு படங்களின் தலைப்பு அறிவிப்பு நிகழ்வு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. ஆன்மீகச் சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
“தத் த்வம் அஸி” மற்றும் “ஆர்ய கேரள வர்மன்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் பான் இந்திய அளவில் பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. ஐயப்ப பக்தி மற்றும் வரலாற்று பின்னணியை மையமாகக் கொண்ட இந்த முயற்சி, தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

