தேச முன்னேற்றத்தின் முதன்மை உந்துசக்தியாகத் திகழும் மகளிர்: டத்தோ ஸ்ரீ ரமணன் புகழாரம்

கோலாலம்பூர், 8 மார்ச் –
குடும்பக் கட்டமைப்பின் சிற்பிகளாகவும், தேச முன்னேற்றத்தின் முதன்மை உந்துசக்தியாகவும் விளங்கும் மலேசியப் பெண்களுக்கு, இன்று அனுசரிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், தமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் சமூகக் கடமை மட்டுமல்ல; அது நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், சமத்துவமான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கும் அடிப்படையான ஒரு முக்கிய அங்கமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

“இன்றைய பெண்கள், தலைமைத்துவப் பண்பு மிக்கவர்களாகவும், துடிப்பான தொழில்முனைவோராகவும், பல்வேறு முக்கியத் துறைகளில் மாற்றத்தை வழிநடத்தும் உயர்நிலை நிபுணர்களாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோக்கில், இந்தியப் பெண்கள் ‘வெற்றி மடானி’ (Vetri MADANI) திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் அழைப்பு விடுத்தார்.

இத்திட்டம், திறன் மேம்பாடு மற்றும் நிதி ஆதரவு மூலம் இந்தியச் சமூகத்தினரின் வருமானத்தை உயர்த்தி, அவர்களின் பொருளாதாரப் பங்களிப்பை முழுமையாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

முன்னதாக, அவர் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் (KUSKOP) துணை அமைச்சராகப் பணியாற்றியபோது, இந்தியப் பெண் தொழில்முனைவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘பெண்’ (PENN) திட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும் அவர் சுட்டிக்காட்டினார்.

50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியுடன் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வாழ்வாதாரம் அளித்த இத்திட்டம், தற்போது PENN 2.0 வாயிலாக 100 மில்லியன் ரிங்கிட் நிதியுடன் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“அதிகாரம் பெற்ற ஒரு பெண், வலிமையான குடும்பத்தையும், செழிப்பான சமூகத்தையும், உலகத் தரம் வாய்ந்த முன்னேறிய தேசத்தையும் உருவாக்குவாள்,” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

மலேசியாவிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் தமது அனைத்திலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட டத்தோஸ்ரீ ரமணன், நாட்டின் மனிதவள மேம்பாட்டுப் பயணத்தில் பெண்களின் பங்கைத் தொடர்ந்து முன்னிறுத்தத் தமது அமைச்சகம் உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles