சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452,000 ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

புத்ராஜெயா, ஏப்ரல் 18 –
மலேசிய இந்தியச் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி, அவர்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பை வழங்கும் ஒரு உன்னத முயற்சியாக, மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு – மித்ரா (MITRA), மொத்தம் 452,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்குகிறது.

மித்ராவின் ‘பந்துவான் சினார் சஹாயா’ (Bantuan Sinar Cahaya) எனும் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிதியுதவி, இக்கட்டான சூழலில் தவிக்கும் இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு பெரும் ஊன்றுகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் 11-ஆவது தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட இந்த நிதியுதவித் திட்டம், மொத்தம் 253 தகுதியுடைய பயனாளிகளுக்குச் சென்றடையவுள்ளது என மித்ரா ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கை வழி தெரிவித்துள்ளது.

எவ்வித தாமதமும் இன்றி, வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் இந்நிதி நேரடியாகப் பயனாளிகளின் வங்கித் கணக்குகளில் சேர்க்கப்படும் என மித்ரா உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறது.

தேசிய நல வாரியத்தின் (YKN) கூட்டுறவோடு செயல்படுத்தப்படும் இந்த நிதியுதவி, இந்தியச் சமூகத்தின் மிக முக்கியமான நான்கு வாழ்வாதாரத் தேவைகளை மையமாகக் கொண்டுள்ளது.

இதில் குறிப்பாக, நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுத் தவிப்பவர்களின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொடர் சிகிச்சைகளுக்காக 57 பயனாளிகளுக்குத் தலா 3,000 ரிங்கிட் வீதம் மொத்தம் 171,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

அதேபோல, 126 மாற்றுத்திறனாளிகளின் (OKU) அன்றாட வாழ்வாதாரத்தைப் பேணும் வகையில் தலா 1,500 ரிங்கிட் வீதம் மொத்தம் 189,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் நலனுக்குப் பெரும் மதிப்பளிக்கும் வகையில், பிரசவத்திற்குப் பிந்தைய செலவுகளைச் சமாளிக்க 48 தாய்மார்களுக்குத் தலா 1,000 ரிங்கிட் வீதமும், குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் 22 வாரிசுக் குடும்பங்களின் மரணச் சடங்கு செலவுகளுக்காகத் தலா 2,000 ரிங்கிட் வீதமும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

மித்ரா சினார் சாஹாயா திட்டமானது வெறும் நிதிப் பங்கீட்டுடன் மட்டும் நின்றுவிடாமல், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர நிவாரணம் மற்றும் படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்குத் தேவையான பிரத்யேக மருத்துவப் படுக்கை வசதிகள் போன்ற விரிவான பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

வறுமை ஒழிப்பு மற்றும் சமூக மாற்றத்தை முன்னிறுத்திச் செயல்படும் மித்ரா, தகுதியுடைய எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய உதவி வழங்கும் செயல்முறைகளைத் தொடர்ந்து சீரமைத்து வருகிறது.

தகுதியுடைய பயனாளிகளின் முழுப் பட்டியலும் மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mitra.gov.my/ms/ என்ற முகவரியில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். இத்திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெற அல்லது ஏதேனும் வினவல்களை முன்வைக்க விரும்புவோர், வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 019-613 6402 / 019-243 2246 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ள விரும்புவோர் infomitra@mitra.gov.my அல்லது pbsc@yknm.gov.my என்ற முகவரிகளைப் பயன்படுத்தலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles