
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஏப் 19-
மிம்தா எனப்படும் மலேசிய இந்திய உலோகப் பொருள் மறுமலர்ச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் கட்டட கடன் இனி எந்த நேரத்திலும் தீர்க்கப்படும் என்று மிம்தா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ செ.ஆறுமுகம் தெரிவித்தார்.
இது ஒருவரின் முயற்சி அல்ல. முன்னாள் தலைவர்கள், முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள், தற்கால செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் அர்ப்பணிப்பும் இதை சாத்தியமாக்கியது.
அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த வெற்றி கிடைத்தது. இந்த சங்கத்தின் கட்டட கடனை தீர்க்க பல வழிகளில் நிதி திரட்டப்பட்டது.

சங்க உறுப்பினர்களின் நேரடி நன்கொடைகள் இந்த முயற்சிக்கு முக்கிய காரணங்கள்.
இந்த தருணத்தில் அனைவரும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் சொன்னார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 30 லட்சம் வெள்ளி மதிப்பில் இந்த மூன்று மாடிக் கட்டடத்தை வாங்கினோம்.

இன்று இந்த கட்டடத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இந்த கட்டடத்தை விற்று புதிய இடத்தில் புதிய கட்டடம் வாங்க. திட்டம் வைத்துள்ளோம்.
இந்த கட்டத்தில் மண்டபமும் இடம் பெறும். இந்த மண்டபம் மூலம் சங்கத்திற்கு வருமானம் கிடைக்கும்.
மேலும் இந்திய மாணவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கும் திட்டத்தையும் மிம்தா கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் லேக் கிளப் ஹவுஸில் மிம்தாவின் 25 ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தலைமையுரை யாற்றி போது டத்தோஸ்ரீ ஆறுமுகம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

