மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்பு பலன்: ஆலயங்களுக்கு 60 லட்சம்; மாணவர்களுக்கு 80 லட்சம் என டத்தோஶ்ரீ ரமணன் அதிரடி அறிவிப்பு!

சுங்கை பூலோ, ஏப்ரல் 19:
மலேசிய இந்தியச் சமூகத்தின் ஆன்மீகப் பலத்தையும், வருங்காலத் தூண்களான மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஒரே நேர்க்கோட்டில் உயர்த்தும் உன்னத நோக்கில், ‘மடானி’ அரசாங்கம் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA) வழியாக, நாட்டின் 300 இந்து ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் வீதம், மொத்தம் 60 லட்சம் ரிங்கிட் நிதி வழங்கப்படவுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்து ஆலயங்களில் சமயம், கலை மற்றும் கலாச்சார விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அரணாக இந்த ‘தர்ம மடானி’ நிதி அமையவுள்ளது.

ஏற்கனவே முதல்கட்டமாக 155 ஆலயங்களுக்கு 31 லட்சம் ரிங்கிட் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 300 ஆலயங்கள் பயன்பெறவுள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ நிதியுதவி வழங்கும் விழா, வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு, பிரிக்பீல்ட்ஸ் கலா மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், மொத்தம் 1,000 இந்து ஆலயங்களுக்கு இந்தத் தர்ம மடானி நிதி நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படும் என அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஆலயங்களுக்கான இந்த ஆன்மீகக் கொடை ஒருபுறமிருக்க, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும் அவர்களின் அடைவுநிலையை மேம்படுத்தவும் 80 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ‘கல்வி மடானி’ திட்டத்தை அமைச்சர் ரமணன் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பகுதி நேர டியூஷன் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. பொருளாதாரச் சூழலால் எந்தவொரு தமிழ்ப்பள்ளி மாணவரும் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இன்று காலை சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில், சுபாங் தோட்டத்து ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அமைச்சர் இந்த அறிவிப்புகளைச் செய்தியாளர்களிடம் முன்வைத்தார்.

மேலும், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் எஸ்பிஎம் தேர்வில் 5 ஏ-க்களுக்கு மேல் பெற்று சாதனை படைக்கும் மாணவர்களுக்குத் தனது சேவை மையத்தின் வாயிலாகச் சிறப்பு வெகுமதிகள் வழங்கப்படும் எனவும் அவர் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

இன்றைய சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்குத் தனது சேவை மையத்தின் வழி உணவுப் பொருட்களையும் மைடின் பேரங்காடி வவுச்சர்களையும் வழங்கிய அமைச்சர், மித்ரா நிதி எந்தவொரு இடைத்தரகர்களும் இன்றி நேரடியாகச் சமூகத்தைச் சென்றடைவதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, மக்களின் ஆன்மீகத் தேவைகளையும், மாணவர்களின் கல்வித் தேவைகளையும் ஒருசேரக் கவனிக்கும் டத்தோஶ்ரீ ரமணனின் இந்தச் செயல்பாடுகள் மலேசிய இந்தியச் சமூகத்தினரிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெறுவதாக ஆலய நிர்வாகத்தினர் பெருமிதத்தோடு குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles