ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எப்போதும் முன்னுரிமை வழங்கும்! :டத்தோஸ்ரீ ரமணன் உறுதி

குளுவாங், ஜூலை 3 –
ஜொகூர் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் மக்களின் நல்வாழ்வையும் மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு பிரம்மாண்டமான முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மத்திய அரசாங்கம், மாநிலத்தை எப்போதும் தனது முன்னுரிமைப் பட்டியலில் முதன்மையானதாகக் கருதி வருவதாக பிகேஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இங்கு நடைபெற்ற ‘ஜொகூரை முன்னேற்றுவோம், ஹராப்பானுக்கு வாக்களிப்போம்’ எனும் பிரச்சாரப் பேரணியில் உரையாற்றிய அவர், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பலன்கள் ஜொகூரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்வதே மத்திய அரசின் முக்கிய இலக்கு என்று குறிப்பிட்டார்.

இதற்காகப் பல நலத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதையும், மேலும் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையே நிர்வாக ஒருமைப்பாட்டை உறுதி செய்வது மிக அவசியம் என்று வலியுறுத்திய டத்தோஸ்ரீ ரமணன், இதன் மூலம் மட்டுமே அரசாங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்களைச் சுமூகமாகவும் தடையின்றியும் செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

எனவே, வரும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வாக்களித்து வலுவான மக்கள் ஆணையை வழங்குமாறு அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பிகேஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அமானா பொதுச் செயலாளர் ஃபைஸ் ஃபட்சில் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் மச்சாப் தொகுதி வேட்பாளர் நூர் ஹபீஸ் ரோஸ்லான், பெனுட் வேட்பாளர் அப்துல் ரசாக் இஸ்மாயில், லாயாங்-லாயாங் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வரும் ஜூலை 7-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பும், அதனைத் தொடர்ந்து ஜூலை 11-ஆம் தேதி பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles