

மியாமி: ஜூலை 4-
உலகக் கிண்ண கால்பந்து தொடரில், கேப் வெர்டே அணியின் அசுர வேக ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஒருவழியாக 3-2 என்ற கணக்கில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது.
இதன் மூலம் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் உலகக் கோப்பை கனவு நூலிழையில் தப்பியது.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்த விறுவிறுப்பான ‘ரவுண்ட்-32’ நாக்-அவுட் சுற்றில், நடப்பு சாம்பியனான பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பைக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ள ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன், அர்ஜென்டினா எளிதாக வென்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், களத்திலோ ஆப்பிரிக்க சிங்கங்கள் அர்ஜென்டினாவுக்கு மரண பயத்தை காட்டின.
ஆட்டத்தில் இரண்டு முறை பின்தங்கிய நிலையிலும், கேப் வெர்டே அணி வீரர்கள் ஆக்ரோஷமாக போராடி கோல் அடித்து அர்ஜென்டினாவை அதிர வைத்தனர்.
மெஸ்ஸி மேஜிக்:
ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி முதல் கோல் அடித்தார். இது இந்த தொடரில் அவர் அடிக்கும் 7ஆவது கோல் ஆகும்.
பதில் கோல் அடிக்க, கேப் வெர்டே வீரர்கள் எடுத்த முயற்சி உடனடியாக நடக்கவில்லை. முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
போராட்டம்:
59ஆவது நிமிடத்தில், கேப் வெர்டே வீரர் டிரோய் டுவர்ட்டி அட்டகாசாக ஒரு கோல் அடித்து சமன் செய்தார். ஆட்ட நேர முடிவில், 1-1 என சமனிலை வகித்ததையடுத்து, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
இதனை பயன்படுத்தி, அர்ஜென்டினாவின் லிசார்ன்டோ மெட்டினிசி, 92ஆவது நிமிடத்தில் அட்டகாசமாக கோல் அடிக்க 2-1 என முன்னிலை வகித்தது.
இதற்கு கேப்வெர்டே 103ஆவது நிமிடத்தில் பதிலடி தந்தது. அந்த அணியின், சிட்னி லோப்ஸ் கேப்ரல் கோல் அடிக்க, போட்டி மீண்டும் (2-2) சமநிலைக்கு சென்றது.
இந்நிலையில், 111ஆவது நிமிடத்தில் கேப் வெர்டே வீரர் டினி செய்த தவறு, அர்ஜென்டினாவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது.
அவர் அடித்த பந்து கேப் வெர்டேவின் கோல் வலைக்குள் செல்ல, 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. ‘ரவுண்ட்-16’ சுற்றில் அர்ஜென்டினா அணி, எகிப்தை எதிர்கொள்கிறது

