மித்ரா ‘உயர்வு மடானி’ மானியத் திட்டத்திற்கு அமோக வரவேற்பு: ஐந்து நாட்களில் 1,340 விண்ணப்பங்கள் பதிவு

புத்ராஜெயா, ஜூலை 3—
மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) அறிமுகப்படுத்திய ‘உயர்வு மடானி’ மானியத் திட்டத்திற்கு இந்திய சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திட்டம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட வெறும் ஐந்து நாட்களில், இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி மொத்தம் 1,340 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவர்களால் கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம், தகுதியுள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு, அவர்களின் வணிக வகையைப் பொறுத்து 50,000 ரிங்கிட் வரையிலான நிதியுதவியை வழங்குகிறது.

இந்த விண்ணப்ப எண்ணிக்கை, குறு சிறு தொழில்முனைவோர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தத் தேவையான நிதி ஆதரவை எவ்வளவு பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதாக மித்ரா தலைமை இயக்குநர் என். ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

ஜூலை 13, 2026 வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட 1,500 விண்ணப்பங்கள் என்ற இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டால், தேர்வு செயல்முறை காலத்திற்கு முன்னதாகவே மூடப்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் தகுதியுள்ள 700 தொழில்முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்படும்.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களின் வணிகத் திறனை மேம்படுத்தவும், அவர்களின் போட்டித்தன்மையை வலுப்படுத்தவும் மற்றும் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ‘உயர்வு மடானி’ திட்டம் ஒரு முக்கிய பொருளாதார மேம்பாட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து இதற்கு முன்னதாக விளக்கிய டத்தோஸ்ரீ ரமணன், இந்திய சமூகத்தைச் சேர்ந்த, குறிப்பாக குறு சிறு தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த நிதி பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த உதவித்தொகை வெளிப்படையாகவும், நேர்மையாகவும், தகுதியுள்ள நபர்களுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

மனிதவள அமைச்சின் (கெசுமா) கீழ் மித்ரா தற்போது மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம், இந்திய சமூகத்தின் கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி (திவெட்), சமூக-பொருளாதார மேம்பாடு, சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், மித்ராவிற்கான வருடாந்திர ஒதுக்கீட்டை கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் உயர்த்தி, மொத்தம் 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக மித்ரா மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அரசாங்கம் அளிக்கும் முக்கிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மிற்றா ‘உயர்வு மடானி’ மானியத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இலக்கை நெருங்கி வருவதால், தகுதியுள்ள தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் விரைந்து விண்ணப்பிக்குமாறு மித்ரா கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசிய பிரஜையாகவும், 21 முதல் 55 வயதுக்குட்பட்டவராகவும், நிறுவனங்கள் ஆணையத்தில் (எஸ்.எஸ்.எம்) முறையான வணிகப் பதிவு வைத்திருப்பவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேல்விவரங்களுக்கு மித்ராவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மற்றும் இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும், 03-8892 3438, 03-8886 6197, 03-8886 6013, 03-8871 1127 அல்லது 03-8886 6221 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் வழியாக infomitra@mitra.gov.my அல்லது sek@mitra.gov.my ஆகியவற்றிலும் தொடர்புகொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles