
கோலாலம்பூர், ஜூலை 7-
பகாங் மாநிலம், ரவூப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் புதிதாகக் கட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்ற ராஜகோபுரத்தின் அஷ்டபந்தன பஞ்சகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 12, 2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.
பல ஆண்டுகளாக பக்தர்களின் ஆதரவுடனும், ஆலய நிர்வாகத்தின் முயற்சியுடனும் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான ராஜகோபுரம், ஆலயத்தின் ஆன்மிகப் பெருமையையும், திராவிடக் கோயில் கட்டிடக்கலையின் சிறப்பையும் பிரதிபலிக்கும் புதிய அடையாளமாக விளங்குகிறது.
இந்த ராஜகோபுர கும்பாபிஷேகம், ரவூப் மற்றும் சுற்றுவட்டார இந்து மக்களுக்கான முக்கிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 11, 2026 (சனிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு, வாணவேடிக்கை மற்றும் வான ஒளிக்காட்சி (Sky Display) நடைபெறவுள்ளது.
குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டு இந்த அரிய ஆன்மிக நிகழ்வைக் கண்டு இறையருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மஇகாவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள உள்ளார். மேலும், கவுரவ விருந்தினராக மசீச தேசிய பொதுச் செயலாளரும் பகாங் மாநில மசீச தலைவருமான டத்தோக் சோங் சின் வூன் பங்கேற்கவுள்ளார்.
இந்த மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆலயத் தலைவர் டத்தோ கே. தமிழ்செல்வன் தலைமையில், ரவூப் இந்து ஆலய சபா மற்றும் அதன் நிர்வாகக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மகா கும்பாபிஷேகம், புதிய ராஜகோபுரத்தின் திருப்பணியை நிறைவு செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மட்டுமன்றி, பக்தர்களின் ஒற்றுமையையும் இறைநம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஆன்மிக விழாவாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

