ஜோகூர் மாநில வாக்காளர்களுக்கு, அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க கெஅடிலான் கட்சியின் மகளிர் செயலாளர் ஜெ. சங்கிதா வேண்டுகோள்.

ஜொகூர் பாரு ஜூலை 10-
மதிப்பிற்குரிய ஜோகூர் மாநில வாக்காளர் பெருமக்களே,

இன்று நாம் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவிருக்கிறோம். அது ஒரு அரசியல் கட்சியைத் தேர்ந்தெடுக்கும் முடிவு மட்டுமல்ல; ஜோகூரின் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவாகும்.

தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகள் வழங்கப்படலாம். ஆனால், ஒரு அரசாங்கத்தின் உண்மையான சாதனையை அளவிடுவது அதன் பேச்சுகளால் அல்ல; அதன் செயல்பாடுகளாலும் பொருளாதாரப் புள்ளிவிவரங்களாலும்தான்.

நாம் அண்டை மாநிலமான சிலாங்கூரைப் பார்ப்போம்.
.

நிலப்பரப்பில் ஜோகூர், சிலாங்கூரைவிட சுமார் 2.4 மடங்கு பெரிய மாநிலம். ஆனால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் 432.1 பில்லியன் ரிங்கிட்டை உருவாக்குகிறது. ஜோகூர் 158 பில்லியன் ரிங்கிட்டில் மட்டுமே உள்ளது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

பெரிய நிலப்பரப்பு இருந்தால் மட்டும் வளர்ச்சி வராது. திறமையான நிர்வாகம் இருந்தால்தான் வளர்ச்சி வரும்.

சிலாங்கூரின் தனிநபர் வருமானம் 65,907 ரிங்கிட். ஜோகூரில் அது 44,762 ரிங்கிட் மட்டுமே. அதாவது, சிலாங்கூர் மக்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. ஏன்? உயர்ந்த தரமான வேலைவாய்ப்புகள், அதிக முதலீடுகள் மற்றும் திட்டமிட்ட பொருளாதார நிர்வாகம் காரணமாக.

வேலைவாய்ப்பைப் பாருங்கள். சிலாங்கூரில் 456,400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜோகூரில் 352,200 மட்டுமே. நம் இளைஞர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் ஏற்பட வேண்டும்?

விலைவாசியிலும் வேறுபாடு உள்ளது. தேசிய பணவீக்கம் 2 சதவீதம். சிலாங்கூரும் அதே அளவில் விலைவாசியைக் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால் ஜோகூரில் அது 2.4 சதவீதம். மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதில் இன்னும் அதிக அக்கறை தேவை என்பதை இது காட்டுகிறது.

மாவட்ட வருமானங்களைப் பாருங்கள். சிலாங்கூரின் சபாக் பெர்ணம் மாவட்டத்தின் வருமானம் இன்று ஜோகூரின் பல மாவட்டங்களை விட உயர்ந்துள்ளது. உலு லங்காட், செப்பாங், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட் போன்ற மாவட்டங்களின் குடும்ப வருமானம், ஜோகூர் பாருவையே மிஞ்சுகிறது.

வறுமை ஒழிப்பிலும் சிலாங்கூர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. உயர்ந்த வறுமைக் கோட்டை நிர்ணயித்திருந்தாலும், பரம ஏழ்மை வெறும் 0.9 சதவீதமாக உள்ளது. ஜோகூரில் அது 2.5 சதவீதம். இது கவனிக்கப்பட வேண்டிய உண்மை.

அன்புடைய மக்களே,

இந்த எண்ணிக்கைகள் யாரையும் குறைகூறுவதற்காக அல்ல. ஜோகூருக்கும் இதுபோன்ற வளர்ச்சி கிடைக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான்.

நல்ல நிர்வாகம் இருந்தால் முதலீடுகள் வரும். முதலீடுகள் வந்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மக்களின் வருமானம் உயரும். வருமானம் உயர்ந்தால் வறுமை குறையும். அதுவே உண்மையான வளர்ச்சி.

எனவே, இந்தத் தேர்தலில் நீங்கள் ஒரு கட்சியை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. உங்கள் பிள்ளைகளின் வேலைவாய்ப்பையும், குடும்பத்தின் வருமானத்தையும், ஜோகூரின் எதிர்காலத்தையும் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

உண்மையான சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு சிந்தியுங்கள். தரவுகளைப் பாருங்கள். செயல்பாடுகளை மதிப்பிடுங்கள். வளர்ச்சியைத் தேர்ந்தெடுங்கள்.அதற்காகவே பக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களியுங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles