துரோலாக் ஶ்ரீ அம்மன் ஆலயத்திற்கு வெ.40 ஆயிரம் – புதிய இடத்திற்கு ஆலயம் இடம் மாற்றம்! :- டத்தோ சிவநேசன் தகவல்!!

சிலிம் ரீவர், ஜூலை 13:

நிலம் வழங்கப்பட்டு நீண்டக்காலம் கடந்து விட்ட நிலையில் துரோலாக் ஶ்ரீ அம்மன் ஆலயம் இடம் மாற்றம் விரைவில் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகத்தின் செயல்பாடுகளையும் துரித நடவடிக்கைகளையும் கேட்டறிந்த பின்னர் மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் இத்தகவலைத் தெரிவித்த அவர் திருவிழாவிற்கு பின்னர் ஆலயம் இடம் மாற்றம் செய்வதற்காக தீவிரப்பணியில் ஆலய நிர்வாகம் களமிறங்கும் என்றும் தனது முதற்கட்ட நிதியாக மாநில அரசின் மானியம் வெ.40 ஆயிரம் வழங்குவதாகவும் சிறப்பு பூஜைக்கு பின்னர் டத்தோ சிவநேசன் அறிவித்தார்.

ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பார்வையிட்ட அவர் நிலம் சார்ந்து எந்தவொரு சிக்கலாக இருந்தாலும் நில அலுவலகத்தை நாடும்படியும் மாவட்ட நில அதிகாரியுடன் கலந்து பேசி எந்தவொரு சிக்கலும் இன்றி ஆலயம் புதிய இடத்தில் அமைவதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பு நிச்சயம் இருக்குமென்றும் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி,மாநில அரசாங்கத்தின் மானியத்தோடு மத்திய அரசு வாயிலாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாயிலாகவும் மானியம் பெற ஆலய நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கிய டத்தோ சிவநேசன் அம்மானியம் கிடைக்கவும் தாம் வழிசெய்வதாக கூறியதோடு விரைந்து ஆலயம் கட்டுவதற்கான பூமிபூஜையை தொடங்குமாறும் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

துரோலாக் வட்டாரத்தில் இன்றையச் சூழலில் அதிகமான இந்தியர்கள் இல்லாவிட்டாலும் திருவிழா காலங்களில் இம்மண்ணின் முன்னாள் வாசிகள் திருவிழாவிற்கு நிறைவாக வருகை புரிந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டக்காலமாக ஆலயத்தை இடமாற்றம் செய்வதில் ஆலய நிர்வாகம் தயக்கம் காட்டி வந்த நிலையில் டத்தோ சிவநேசனின் ஆலோசனை மற்றும் அவரது வழிகாட்டலோடு அவர் வழங்கி வரும் ஆதரவும் பங்களிப்பும் பெரியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தி விரைவில் புதிய ஆலயம் கட்டும் பணியில் ஆலய நிர்வாகம் முனைப்பு காட்டவிருப்பதாக ஆலயத் தலைவரும் நிர்வாகத்தினரும் தெரிவித்தனர்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு அரணாக இருப்பது போலவே இம்மாநிலத்தின் ஆலயங்களுக்கும் பெரும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் திகழும் டத்தோ சிவநேசனால் துரோலாக் ஶ்ரீ அம்மன் ஆலயமும் புதியதோர் உருமாற்றமும் தோற்றமும் காணும் என்பதில் ஐயமில்லை என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles