

பத்துகாஜா,ஜூலை 23
: ஒரு நாட்டின் வளர்ச்சியும் மேம்பாடும் கல்வி கற்ற சமூகத்தால் பெரும் உருமாற்றம் காண்பதாக கூறிய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவகுமார் ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கையே கல்வியின் மூலதனத்திலிருந்தே உயிர்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய மாணவர்களின் கல்வி சாதனை இந்நாட்டின் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு வித்திடுவதாகவும் கூறிய அவர் கல்வி நம்மின மாணவர்களின் சாதனைகளால் ஒரு நாடே பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.
பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தங்களின் உயர்கல்வியைத் தொடரும் இரு மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிய பின்னர் மாண்புமிகு சிவகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த கல்வி உதவி, குறிப்பாக உயர்கல்வியைத் தொடங்கும் ஆரம்ப செலவுகளை சமாளிக்க குடும்பங்களின் நிதிச் சுமையை குறைப்பதற்காக வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகை சிறியதாக இருந்தாலும், மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் புதிய முக்கிய கட்டத்தை தொடங்கும் இந்த நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறிய அவர் கல்வி சார்ந்த தேவைகளுக்காக உதவிடவும் வழிகாட்டவும் தனது சேவை மையத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றார்.
ஒருவரின் சிறந்த எதிர்காலத்திற்கு கல்வி மிக முக்கியமான மூலதனமாகும். பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையத்தில், குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம் என்று உறுதிப்பட கூறிய அவர் மாணவர்களின் கனவுகள் நிதி சிக்கலால் ஒருபோதும் தடைப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே தனது பெரும் கடமை என்றும் தெரிவித்தார்.
மேலும், உழைப்பும் உறுதியும் கொண்ட மாணவரும் தங்கள் கனவுகளை அடைய வாய்ப்பு பெற தகுதியானவர்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் சிறந்த திறமை, உயர்ந்த இலக்கு மற்றும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் உறுதியைக் கொண்ட இளைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து ஆதரிப்பதாகவும் கூறினார்.
இரு மாணவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி, ஒருநாள் தங்கள் அறிவும் திறமைகளும் மூலம் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பார்கள் எனவும் சிவகுமார் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.

