

லிங்கி, ஜூலை 23-
இந்திய சமுதாயத்திடம் மருத்துவ விழிப்புணர்வு இல்லாதது மிகுந்த வேதனையை அளிப்பதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் தேர்தல் இயக்குநர் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன் கூறினார்.
பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஷ்குமார் ஆலோசனையில் அடிப்படையில் லிங்கியில் உள்ள இந்திய சமுதாயத்தை சந்திக்க இன்று நேரில் சென்றிருந்தோம்.
கம்போங் செங்காங் எனும் பகுதியில் யானைக் கால் நோயால் பாதிக்கப்பட்ட 49 வயதுடைய
பாலசுப்ரமணியம் மாரியப்பன் என்பவரை சந்தித்தோம்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்நோயால் பாதிக்கப்பட்டு வரும் அவரின் பிரச்சினைகளை கேட்டறிந்தோம். எஸ்.பி.கேர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான டாக்டர் ஹெரிஸ் அவரை பரிசோதித்தார். அதோடு, செர்டாங் மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்படவிருக்கும் அருவை சிகிச்சை குறித்த தகவலை கேட்டறிந்தார்.
பின்னர், மற்றொரு வீட்டில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 53 வயதான சாந்தி தம்பூசாமி என்பவரை சந்தித்து அவருக்கு மருத்துவ ஆலோசனை உட்பட மருந்துகளும் வழங்கப்பட்டது.
இந்த நோய்கள் அனைத்திற்கும் ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சைகள் வழங்கினால் அதனை குணப்படுத்தி விடலாம்.
ஆனால் சம்பந்தப்பட்ட நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாதது தான் தற்போது அவர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகவே, இவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதனிடையே ஒரு மருத்துவர் என்ற முறையில் தாம் இங்கு வந்தாக அவர் சொன்னார். இது தம்முடைய மருத்துவ சேவையாகும். எனவே,
இதையும் அரசியல் பயணத்தையும் இணைக்க வேண்டாம். அரசியல் வேறு மருத்துவ சேவை வேறு என்றும் டாக்டர் சத்ய பிரகாஷ் கூறினார்.

