ஆராயாமல் பொய்களைக் கட்டமைக்காதீர் – இனவாதத்திற்கு வழிவகுக்கும்  டத்தோ சிவநேசன் எச்சரிக்கை!!

 மலேசியத் தமிழர் தேசியப் பேரவை மன்னிப்பு கோர வேண்டும்!!

ஈப்போ,ஜூலை24: சமூக ஊடகங்களில் ஒரு விடயத்தைப் பகிரும் போது அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பதிவிட வேண்டும்.

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து இல்லாத ஒன்றை இருப்பது போல் கட்டமைப்பது அறிவுக்கு ஒவ்வாத ஒன்று என பேரா மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

 பல்லினம் வாழும் நாட்டில் ஒரு விடயம் உணர்ச்சி ரீதியில் பதிவிடும் போது அஃது இனவாதத்திற்கு வழி செய்யும் எனவும் எச்சரித்த அவர் பொய்யான பதிவை தனது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவிட்ட மலேசியத் தமிழர் தேசிய பேரவை வெளிப்படையான மன்னிப்பை கோர வேண்டும் என்றும் தவறினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில ஒருமைப்பாட்டின் ஆட்சிக்குழு தலைவருமான சிவநேசன் நினைவுறித்தினார்.

ஈப்போவில் ஜாலான் கோலாகங்சார் அருகிலுள்ள குன்றில் ஈப்போ என்னும் அடையாள சின்னம் மலாய் மற்றும் சீன மொழிகளில் இருப்பது செய்ற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பொறுப்பற்ற யாரோ ஒருவர் பதிவேற்றம் செய்த பொய்யான ஒன்றை தங்களின் அதிகாரப்பூர்வ முகநூலில் மலேசியத் தமிழர் தேசிய பேரவை பதிவிட்டு தமிழ் மொழி எங்கே?தமிழில் ஏன் இல்லை போன்ற உருவகத்தில் அதனைப் பதிவேற்றம் செய்துள்ளதை கண்டித்தும் சிவநேசன் இவ்வாறு கருத்துரைத்தார்.

முகநூல்களில் இத்தகவல் பரவிய சில மணிநேரங்களிலேயே ஈப்போ மாநாகர மன்றம் அது பொய்யான செய்தி எனவும்,இதற்கு முன் அங்கிருந்த மலாய் மொழியிலான ஈப்போ என்னும் சின்னம் சீரமைப்பு மற்றும் உருமாற்றங்களுக்காக அகற்றப்பட்டும் மீண்டும் அங்கு பொருத்தப்படவில்லையெனவும் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு தகவலின் உண்மை தன்மை ஆராயாமல் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் இனவாத போக்குடன் செயல்படுவது ஆபத்தானது.இதுபோன்ற பொறுப்பற்ற செயலில் தனிநபர்களோ அல்லது அமைப்புகளோ ஈடுப்படக்கூடாது எனவும் டத்தோ சிவநேசன் எச்சரித்தார்.

இன்றையக் காலக்கட்டத்தில் சமூக ஊடகங்களும் செயற்கை நுண்ணறிவும் காலத்தின் தேவையாக இருப்பினும் அவற்றை நன் செயல்களுக்காக பயன்படுத்த வேண்டும்.அதை தவிர்த்து பொய்யானவற்றை உலா விடவும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் வகை செய்ய கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பேரா மாநிலத்தைப் பொருத்தமட்டில் ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.பேரா மாநில சுல்தான் அவர்களும் சட்டமன்றக் கூட்டத் தொடரை தொடக்கி வைக்கும் போதெல்லாம் ஒற்றுமை ஒருமைப்பாடு சார்ந்தும் அதன் முக்கியத்துவத்தை முன் வைப்பார் என்பதையும் நினைவுக்கூர்ந்த சிவநேசன் இம்மாநிலத்தில் தேவையற்ற கருத்துரைகள் தவிர்க்கப்பட வேண்டும்.ஒற்றுமையும் புரிந்துணர்வும் மத நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காண்பித்தார்.

அதே வேளையில்,பேரா மாநில ஒருமைப்பாடு துறைக்கு புதிய இயக்குநராக டாக்டர் பே சங் ஹவ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது அனுபவமும் ஆற்றலும் இம்மாநில மக்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்றார்.

மேலும்,இனி வருங்காலங்களில் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் விளைவிக்கும் எந்தவொரு நபர் மீதும் அல்லது இயக்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறை புகார்களை ஒருமைப்பாட்டு இயக்குநரே நேரடியாக மேற்கொள்வார் எனவும் டத்தோ சிவநேசனை மரியாதை நிமித்தமாக டாக்டர் பே சங் ஹவ் தன் குழுவினரோடு சந்தித்தப் பின்னர் இத்தகவலையும் சிவநேசன் பகிர்ந்தார்.

இறுதியாய்,மலேசியத் தமிழர் தேசிய பேரவை நாளிதழ்கள்,சமூக ஊடகங்கள் மற்றும் கடிதம் வாயிலாகவும் வெளிப்படையான மன்னிப்பை முன் வைக்க வேண்டும்.தவறினால் நிச்சயம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மீண்டும் நினைவுறுத்தினார் டத்தோ சிவநேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles