
கோலாலம்பூர், ஜூலை 24 – மலேசிய இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முயற்சிகள், தரமான கல்வி, முழுமையான சமூக நலன், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய சமூகத் தலைவர்களுடனான சந்திப்பின்போது இந்த முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்ததாக, தனது பேஸ்புக் பதிவில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் கல்வித் தரத்தை உயர்த்துதல், சமூக நலத் திட்டங்களை வலுப்படுத்துதல், திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துதல் மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்முயற்சிகள் அரசாங்கம், தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்படும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சமூகத்தின் தேவைகள் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிந்துரைகளையும் இந்திய சமூகத் தலைவர்கள் அந்தச் சந்திப்பில் முன்வைத்ததாக அன்வார் தெரிவித்தார்.
அந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் அரசாங்கம் கவனமாக பரிசீலித்து, இந்திய சமூகத்தின் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்தார்.

