
சிரம்பான், ஜூலை 24-
“உம்மா ஒற்றுமை” என்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்து மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக, நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட “மக்கள் ஒற்றுமை” (Kesatuan Rakyat) மட்டுமே மலேசியாவின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் என பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
1981 முதல் பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், முஸ்லிம்கள், மலாய்க்காரர்கள் மற்றும் மலேசிய மக்களிடையே பிளவை ஏற்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதே ஆண்டில் அவர் அம்னோவை “ஜாஹிலியா கட்சி” என்றும் விமர்சித்தார்.
ஆனால் தற்போது, “உம்மா ஒற்றுமை” என்ற பெயரில் அம்னோவுடன் இணைய விரும்புவது அரசியல் முரண்பாட்டையே வெளிப்படுத்துகிறது என டத்தோஸ்ரீ அமிருடின் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இதுபோன்ற முயற்சிகள் புதிதல்ல என்றும், 1972-ஆம் ஆண்டு பாஸ் – பாரிசான் நேஷனலில் இணைந்தது, 2008-இல் பாரிசான் நேஷனல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது, 2018-இல் பொதுத் தேர்தலில் முதன்முறையாக ஆட்சியை இழந்தது ஆகிய மூன்று காலகட்டங்களிலும் இதேபோன்ற அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததோடு, கொள்கையற்ற, அதிகார ஆசையால் செயல்படும் அரசியல் அணுகுமுறைகள் மீண்டும் தோல்வியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
திரெங்கானு, கிளாந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் போன்ற மாநிலங்களில் பெரும்பான்மை அல்லது முழுமையான ஆட்சி இருந்தபோதிலும், அங்குள்ள மக்கள் டோக்கியோ, துபாய் அல்லது தோஹா போன்ற நகரங்களின் தரத்திற்கு இணையான வாழ்க்கைத் தரத்தையோ, உயர்ந்த வருமானத்தையோ பெறவில்லை.
மாறாக, வேலைவாய்ப்பும், சிறந்த வாழ்க்கைத் தரமும் கிடைப்பதற்காக அங்குள்ள மக்கள் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
பக்காத்தான் ஹராப்பான், நம்பிக்கை, நல்லொழுக்கம் மற்றும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமை அரசாங்கத்தின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்தையும் நிரூபித்துள்ளதாக அவர் கூறினார்.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் தற்போது மத்திய அரசிலும் அந்தச் சாதனைகள் மக்களால் அனுபவிக்கப்பட்டு வருவகிறது.
வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்க நிதியுதவி, அனைத்து மதங்களும் அமைதியாகக் கடைப்பிடிக்கப்படும் சூழல், இளைஞர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், மலிவு விலை வீடுகள், முதியோருக்கான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
‘உம்மா ஒற்றுமை’ என்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்து மக்களை குழப்புவதற்குப் பதிலாக, ருக்குன் நெகாரா கோட்பாடுகளுக்கு ஏற்ப, வளமான, நல்லிணக்கமான, நிலையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மலேசியாவை உருவாக்கும் “மக்கள் ஒற்றுமை” கொள்கையையே பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து முன்னெடுக்கும் என சிலாங்கூர் மந்திரி பெசாருமான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.

